
சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி மறைவையொட்டி அவரது இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்.
சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி தனது நண்பருடன் இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்றார். அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மலைப்பகுதியிலிருந்து கவிழ்ந்து சட்லஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்தக் கோர விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் கோபிநாத் என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சட்லஜ் நதியில் விழுந்த காரிலிருந்து காணாமல் போன சைதை துரைசாமியின் மகன் வெற்றியைத் தேடும் பணி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், சட்லெஜ் ஆற்றில் மாயமான வெற்றி துரை சாமி சடலமாக மீட்கப்பட்டார்.
விபத்துக்குள்ளான இடத்திலிருந்து 6 கி.மீத்தொலைவில் ஆற்றில் அவரது உடல் கிடைத்தது. வெற்றியின் உடல், ஏர் ஆம்புலன்ஸ் விமானம்மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. சென்னை சிஐடி நகரில் உள்ள இல்லத்தில் வெற்றி துரைசாமியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
வெற்றி துரைசாமி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோரும் சென்று அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திய பின்னர் சைதை துரைசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
வெற்றி துரைசாமி உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மதிமுக தலைவர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.
மகனை அடக்கம் செய்தபின்னர் பேசிய சைதை துரைசாமி, “என் மகன் போனாலும் எனக்கு நிறைய மகன்கள் மகள்களும் இங்கே வந்து இருக்கிறார்கள். எனக்கு ஒரு மகன் போனாலும், எனக்குப் பக்க பலமாக எனக்கு நிறைய மகன்கள் இருக்கிறார்கள் என்ற மன வலிமையுடன் இருக்கிறேன் என்று உருக்கமாகப் பேசினார் சைதை துரைசாமி.
இந்த நிலையில் இன்று சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி மறைவையொட்டி அவரது இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

