Advertisements

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை சிவானந்தா சாலையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் மகளிர் அணிகள் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில், பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன், பாஜக மாநில துணைத்தலைவர் குஷ்பூ, அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி என பலர் பங்கேற்று திமுக அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர், வானதி ஸ்ரீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் தமிழகத்தில் திமுக ஆட்சியின் கீழ் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில், அதிகரித்துள்ளதாகக் குற்றம் சாட்டினார். தொடர்ந்து, ஏழு வயதுக் குழந்தை முதல் 70 வயது மூதாட்டி வரை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்றும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய இந்த அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் கூறினார்.
மேலும், இதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள மகளிர் அணியினர் அடுத்த 60 நாட்களுக்குத் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தீவிரப் பிரச்சாரத்தை முன்னெடுக்க உள்ளதாகத் தெரிவித்தார்.
Advertisements




