
ரக்சா பந்தனையொட்டிக் குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். வட இந்தியாவில் ஆண்டுதோறும் சிராவண மாதத்தின் பவுர்ணமி நாளில் ரக்சா பந்தன் விழா கொண்டாடப்படுகிறது. தமிழில் ஆடி அல்லது ஆவணி மாதத்தில் இந்த விழா வருகிறது. இன்று நாடு முழுவதும் ரக்சா பந்தன் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் அன்பையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தும் வகையில் ஒருவருக்கொருவர் வண்ணக் கயிறுகளைக் கையில் கட்டி விட்டு வாழ்த்துக் கூறுவது வழக்கமாகும். இதையொட்டிக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விடுத்துள்ள செய்தியில், சகோதரிகளுக்கும் மகள்களுக்கும் மதிப்பும், பாதுகாப்பும் அளிக்க வேண்டியதன் தேவையை நம் விழாக்கள் வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ரக்சா பந்தனையொட்டி அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள செய்தியில், சகோதர சகோதரிகளிடையே பாதுகாப்புக்கான அன்பு, நம்பிக்கை ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் ரக்சா பந்தன் விழா கொண்டாடப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள செய்தியில், நமது சகோதரிகளின் மதிப்பு, பாதுகாப்பு, மகிழ்ச்சி, செழிப்பு ஆகியவற்றுக்குக் கடமைப்பட்டுள்ள ரக்சா பந்தன் விழா காட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

