தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த ‘வாழை’ சிவனைந்தன்!

’வாழை’ படப்புகழ் நடிகர் சிவனைந்தன் தவெக கட்சியில் இணைந்துள்ளார்.

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புளியங்குளம் கிராமத்தில் மாற்று கட்சியைச் சேர்ந்தவர்கள், ஊர்பொதுமக்கள், பெண்கள், இளைஞர்கள் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சி புளியங்குளம் ஊர் பகுதியில் நடந்தது. இதற்காக வருகை தந்த தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டப் பொறுப்பாளர் அஜிதா ஆக்னலுக்கு ஊர் மக்கள் மற்றும் கட்சியினர் ஆரத்தி எடுத்துப் பட்டாசு வெடித்து வரவேற்பு அளித்தனர். ஊர்பொதுமக்கள், பெண்கள், இளைஞர்கள் எனச் சுமார் 200க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் அஜிதா ஆக்னல் முன்னிலையில் இணைந்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த பொதுமக்கள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு அஜிதா ஆக்னல் கட்சி துண்டு அணிவித்து வரவேற்றார். அப்போது ‘வாழை’ திரைப்படத்தில் நடித்த பொன்வேல் என்பவரும் தன்னை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டார். இதற்காக அவரை மாவட்டப் பொறுப்பாளர் கட்சி துண்டு அணிவித்து வரவேற்றார். இயக்குநர் மாரிசெல்வராஜிற்கு சொந்த ஊர் புளியங்குளம். இந்தப் புளியங்குளத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் நேற்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கட்சி பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் பேசுகையில், “2026 ல் எங்கள் தளபதியாரை அரியனையில் ஏற்றுவதற்காக இந்தப் பணிகளைத் தொடங்கியுள்ளோம். வருகின்ற காலத்தில் இந்தப் பகுதி மக்களுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் செய்வோம். இந்தக் கிராமத்திலிருந்து மாற்று கட்சிகளான அதிமுக, திமுக, விசிக, பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகளிலிருந்து விலகி எங்கள் கட்சியில் இணைந்துள்ளார்கள். இன்றைய தினம் மட்டும் 200க்கும் மேற்பட்டோர் எங்கள் கட்சியில் இணைந்துள்ளனர். ’வாழை’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த தம்பி இன்று எங்கள் கட்சியில் தன்னை இணைத்துள்ளார்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *