
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் சந்தேகத்திற்கு இடமான 3 இஸ்லாமியர்கள் இல்லத்தில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
தேனி மாவட்டம் உத்தம பாளையத்தில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாகக் கிடைத்த தகவலில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தன் தலைமையிலான போலீசார் வருவாய்த் துறையினருடன் இணைந்து உத்தமபாளையம் பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.
உத்தமபாளையம் பாதார்கான் பாளையத்தில் வசிக்கும் அகமது மீரான், இந்திரா நகர் அசாருதீன் மற்றும் வடக்குத் தெரு தர்வேஷ் மைதீன் ஆகிய 3 இஸ்லாமியர்கள் இல்லங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.
இதில் அகமது மீரான், அசாருதீன் ஆகிய இருவரது இல்லங்களில் ஆயுதங்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை.
கல்லூரி மாணவரான தர்வேஷ் மைதீன் என்பவரது இல்லத்திலிருந்து மட்டும் சிறிய கத்திகள் மற்றும் இரும்புக்கம்பிகள், இரும்பு பைப்கள் வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
அந்த ஆயுதங்கள் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் வகையில் இருந்ததால் அவற்றைக் கைப்பற்றவில்லை எனவும், மேல் விசாரணைக்காக ஆதார், ரேசன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களை மட்டும் பெற்றுக் கொண்டு விசாரணைக்கு அழைக்கும்போது வர வேண்டும் எனக் கூறிச் சென்றதாகப் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
போலீசாரின் இந்தத் திடீர் சோதனைக்காக உத்தமபாளையம் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஆங்காங்கே குவிக்கப்பட்டதால் உத்தமபாளையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


