“25 நாட்களில் உருப்படியான திட்டமில்லை” – முதல்வர் விஜய்யை விமர்சித்த உதயநிதி!

தமிழகத்தில் தற்போது யார் சட்டமன்ற உறுப்பினர், யார் அமைச்சர் என்றே முதலமைச்சருக்கே தெரியாத அளவிற்குத்தான் ஆட்சி நடக்கிறது என்று எதிர்கட்சித் தலைவர் உதயநிதி விமர்சித்துள்ளார்.

சென்னை, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி திமுக நிர்வாகிகளுக்கான நன்றி தெரிவிப்புக் கூட்டத்தில், எதிர்கட்சித் தலைவர் உதயநிதி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, புதிய அரசு பொறுப்பேற்று 25 நாட்கள் ஆகியும், உருப்படியாக ஏதாவது ஒரு திட்டத்தை நிறைவேற்றி இருக்கிறார்களா என்று வினவினார்.

மேலும், ஸ்டிக்கரை மாற்றி ஒட்டி, சிங்கப்பெண் என்ற திட்டத்தை கொண்டு வருவோம் என சொல்லி அதையும் கொண்டுவர வக்கில்லாத ஒரு சோபா மாடல் ஆட்சியாக தற்போதைய ஆட்சி உள்ளது என்று தெரிவித்தார். முதலமைச்சர் கோட்-சூட் அணிந்ததில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், அவர் எல்லா விதத்திலும் கோட்டை விட்டுக் கொண்டிருப்பதுதான் பிரச்சினை என்று கூறினார்.

தொடர்ந்து, பேசிய அவர், தமிழகத்தில் தற்போது யார் சட்டமன்ற உறுப்பினர், யார் அமைச்சர் என்று முதலமைச்சருக்கே தெரியாத அளவிற்குத்தான் ஆட்சி நடக்கிறது என்று விமர்சித்தார்.

தேர்தல் முடிவுகள் முழுமையாக வருவதற்கு முன் நம்முடன் கூட்டணி வைத்திருந்த காங்கிரஸ் கட்சி, நம்ம பெயரை சொல்லி வாக்கு கேட்டுவிட்டு, தற்போது நன்றி கூடத் தெரிவிக்காமல் சென்ற நன்றிகெட்ட கூட்டம் என்று குற்றம் சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *