Udumalaipettai Tribals: மாடுகளை மேய்க்க அனுமதி வழங்க வேண்டும்!

மாடுகளை மேய்க்க அனுமதி வழங்க வேண்டும்!

மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை காக்க ஆழியார் அணைக்குள் பாரம்பரியமாக மாடுகளை மேய்க்க அனுமதி வழங்க வேண்டும் என  மலைவாழ் மக்கள் சங்கத்தினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

உடுமலை: உடுமலை மலைவாழ் மக்கள் சங்கத்தினர் கோட்டாட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரகம், மாவடப்பு, காட்டுப்பட்டி மலைவாழ் மக்கள் குடியிருப்பைச் சேர்ந்தவர்கள், பாரம்பரியமாக வறட்சியான காலங்களில், ஆழியார் அணைக்குள் தாங்கள் வளர்க்கும் மாடுகளைக் கொண்டு சென்று பட்டி அமைத்து அங்கேயே தங்கி மேய்ப்பது வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

நடப்பாண்டு 3 மாதத்திற்கு முன் 20 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், ஆழியார் அணைக்கரையில் மாட்டுப்பட்டி அமைத்து அங்கேயே தங்கி, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடங்களில் மாடுகளை மேய்த்து வருகின்றனர். மழை அதிகம் பெய்து அணைக்கு நீர் வந்தால், குடியிருப்பு பகுதியில் தீவனப்புல் வளர்ந்து விட்டால் மாடுகளைத் திரும்பக் கொண்டு வந்து விடுவார்கள்.இந்நிலையில் வனத்துறையைச் சேர்ந்தவர்கள், மாடுகளை மேய்க்கக் கூடாது எனக் கூறி வருகின்றனர்.

இதற்கு முன் இதே போல் பிரச்சினை ஏற்பட்டபோது, உடுமலை வருவாய் கோட்டாட்சியர் தலையிட்டு, வன உரிமை சட்டப்படி பாரம்பரியமாக எங்கெல்லாம், தங்கி மாடுகளை மேய்த்தார்களோ, அங்கெல்லாம் தங்கி மேய்ப்பதற்கு சட்டப்படி உரிமை உள்ளது.எனவே மலைவாழ் மக்கள் ஆழியார் அணையில் மாடுகளை மேய்க்க அனுமதியை பெற்றுக்கொடுத்தார். அதற்குப் பின் கடந்த 5 ஆண்டு காலமாக மாடுகளை மேய்த்து வருகிறோம்.

அணையில் மாடுகளை மேய்க்க வரும்போது, தாடக நாச்சியம்மன் சுவாமிக்கு நேர்ந்து சாமி கிடா விட்டு வளர்ப்பது வழக்கம். திரும்பச் செல்லும்போது கிடா வெட்டிச் சாமி கும்பிட்டு விட்டுச்செல்வார்கள்.அதற்கும் தடை விதிக்கின்றனர். எனவே, கோட்டாட்சியர் தலையிட்டு, பாரம்பரியமாக மாடுகளை மேய்க்கும் மலைவாழ் மக்கள் உரிமையைப் பாதுகாத்து, மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *