
பிரதமர் மோடியின் கல்லூரி பட்டப் படிப்பு சான்றிதழ் போல் போலியானது அல்ல தங்கள் சிவசேனை கட்சி என்று உத்தவ் தாக்கரே பதிலடி கொடுத்திருக்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனைக் கட்சி இரண்டாக பிளவுபட்டு ஷிண்டோ தலைமையில் ஒரு அணியும் உத்தவ் தாக்கரே தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டுவருகிறது.
ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சி அதிக எம்எல்ஏக்களுடன் பாஜகவுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி நடத்தி வருகிறது.
இந்த வாரத் தொடக்கத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை கட்சியை “போலி சிவசேனை” என்று விமர்சித்து இருந்தார்.
அதற்கு பதிலடி கொடுத்த உத்தவ் தாக்கரே, “எங்களுடைய சிவசேனை கட்சி, உங்கள் கல்லூரி பட்டப்படிப்பு சான்றிதழ் போல் போலியானது அல்ல; மகாராஷ்டிரா மண்ணின் மைந்தர்களின் உரிமைக்காக போராடுவதற்காக பால் தாக்கரே தொடங்கியது, சிவ சேனை கட்சி” என்று கூறியிருக்கிறார்.
மும்பை அருகில் உள்ள போய்சார் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போது உத்தவ்தாக்கரே இவ்வாறு கூறினார்.
இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி 300க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும் என்றும் அவர் அப்போது நம்பிக்கை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-
“மத்திய அரசின் நல்ல திட்டங்கள் அனைத்தும் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்துக்கு போய் விடுகின்றன. சுற்றுச்சூழலை பாதிக்கும் வதாவன் துறைமுக திட்டம் போன்றவை தான் நமது மாநிலத்தில் தொடங்கப்படுகின்றன.
அந்த துறைமுகம் அமைக்கப்படும் இடத்திற்கு ஏற்கனவே கடந்த 90களில் சென்ற நான், அங்குள்ள கிராம மக்களையும் மீனவர்களையும் சந்தித்து பேசினேன். இந்தத் திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அது பற்றி எனது தந்தையான சிவசேனை கட்சி தலைவர் பால் தாக்கரேயிடம் தெரிவித்தேன். உடனடியாக அந்தத் திட்டம் அப்போது கைவிடப்பட்டது.
அந்தப் பகுதி மக்களின் விருப்பத்திற்கு மாறாக மீண்டும் வதாவன் துறைமுகத் திட்டத்தை செயல்படுத்த விரும்பினால் தொடருங்கள். இந்த அரசின் மீது “மக்கள் புல்டோசரை” ஏற்றி நசுக்கி விடுவோம்.
இந்த தொகுதியில் எங்கள் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றால் இந்த திட்டத்தை மக்களவையில் உறுதியாக எதிர்பார். எங்கள் கட்சியின் வடமேற்கு மும்பை வேட்பாளர் அமோல்
கீர்த்திகாருக்கு மும்பை மாநகராட்சி கிச்சடி ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருப்பதை ஏற்க முடியாது”.
இவ்வாறு உத்த தேவ் தாக்கரே கூறினார்.
புறநகர் ரெயிலில்… பொதுக்கூட்டம் முடிந்ததும் அங்கிருந்து (ஏறத்தாழ 110 கிலோமீட்டர் தூரம்) புறநகர் ரயிலில் புறப்பட்டு உத்தகத் தாக்கரே வீடு திருப்பினார். கட்சியின் சஞ்சய் ராவுத் உள்ளிட்ட தலைவர்களும் அவருடன் ரயிலில் பயணித்தனர்.


