
பழனி கோவில் நில மோசடி விவகாரத்தில் வெள்ளத்துரை, முருகதாஸ் உள்பட 3 பேரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கலில் உள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.4 ஏக்கர் நிலத்தை, கடந்த 6ஆம் தேதி வெள்ளத்துரை, சேதுபதி ஆகிய இருவரின் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. 100 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட இந்த நிலத்தை வெறும் 2 கோடிக்குக் கணக்குக் கிரயம் செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாகக் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் கோவில் சொத்து என்பதை மறைத்து தனிநபர்களுக்குக் கிரயம் செய்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இந்த மோசடிக்கு உறுதுணையாக இருந்த பழனி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், வெள்ளத்துரை, சேதுபதி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும், சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகிய 2 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து, இந்த முறைகேடு தொடர்பான வழக்கைத் தமிழக டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார். இதன்அடிப்படையில், இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், நில மோசடி விவகாரத்தில் வெள்ளத்துரை, முருகதாஸ் உள்பட 3 பேரை கைது செய்துள்ளனர்.



