
மும்பை:
மத உணர்வைப் புண்படுத்தக் கூடாது எனச் சனாதனம் குறித்து பேசிய உதயநிதிக்கு உத்தவ் தாக்கரே அணி எம்.பி சஞ்சய் ராவத் அறிவுரை வழங்கி உள்ளார்.
சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசியது நாடு முழுவதும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். திமுக இடம்பெற்றுள்ள “இண்டியா” கூட்டணியிலும் இது எதிரொலித்தது. திரிணமுல் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே -சிவசனோ உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்பது திமுக கட்சிக்குச் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, உத்தவ் அணி எம்.பி சஞ்சய் ராவத் கூறியிருப்பதாவது: ஒரு அமைச்சராக இருந்து கொண்டு உதயநிதி இப்படி பேசியதை யாரும் ஆதரிக்கமாட்டார்கள். இது போன்ற கருத்துகளைச் சொல்வதை தவிர்த்து இருக்க வேண்டும். இது திமுக அல்லது உதயநிதியின் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம். ஆனால் நாட்டில் சுமார் 90 கோடி ஹிந்துக்கள் வாழ்கிறார்கள்.
மற்ற மதத்தினரும் இருக்கிறார்கள். அவர்களின் மத உணர்வுகளை மதிக்க வேண்டும். புண்படுத்தக் கூடாது. நாட்டின் நிலைமை மேலும் மோசமாகி விடக் கூடாது. எங்களது கூட்டணியைத் தாக்குவதற்கு இது போன்ற வெடிப்பொருட்கள் பாஜ., வினருக்கு கிடைத்து விடக் கூடாது.திமுக தலைவர் ஸ்டாலினை நாடே கவனிக்கிறது. பாஜ., வுக்கு எதிரான போரில் அவர் எங்களுடன் சேர்ந்து உள்ளார். எனவே அவருடன் நெருக்கமாக இருப்பவர்கள் இது போன்ற கருத்துகளைச் சொல்வதற்கு முன் சிந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

