
பிரான்ஸ் நாட்டில் இருந்து சொந்த ஊரைக் காண உயர்ரக இருசக்கர வாகனத்தில் புதுச்சேரிக்கு வந்த இளம் ஜோடிகளை உறவினர்கள் பட்டாசு வெடித்தும், ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர். பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரைச் சேர்ந்தவர் கெவீன்.
இவரது தாய் -தந்தையர் புதுச்சேரி வெங்கடா நகரைச் சேர்ந்தவர்கள். இவர்களும் பாரீசில் வசித்து வருகின்றனர். தனது மனைவியான ஈம்மாவிற்கு தனது சொந்த ஊரான புதுச்சேரியைக் காண்பிக்கக் கெவீன் விரும்பினார்.
இருவரும் உயர்ரக இருசக்கர வாகனத்தில் 5 மாதங்களுக்கு முன் பிரான்ஸ் நாட்டில் இருந்து புறப்பட்டனர். பிரான்சில் இருந்து இத்தாலி, ஸ்லோவேனியா, குரோசியா, கிரீஸ், துருக்கி எனப் பல்வேறு நாடுகள் வழியாக 23 ஆயிரம் கிலோ மீட்டரை இருசக்கர வாகனத்திலேயே கடந்து புதுச்சேரிக்கு வந்துள்ளனர்.
ஒரு மாதக் காலம் புதுச்சேரியில் இருக்கும் இவர்கள் டிசம்பர் மாதம் பாரீஸ் நகருக்கு விமானம் மூலம் திரும்புகின்றனர். புதுச்சேரிக்கு வந்த இளம் ஜோடிகளை உறவினர்கள் ஆரத்தி எடுத்தும், பட்டாசு வெடித்தும் உற்சாகத்துடன் வரவேற்றனர்.


