
தெலங்கானாவில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இருபது பேர் உயிரிழந்தனர். தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள சீவெல்லா காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட கானாப்பூர் கேட்டுக்கு அருகே பேருந்தும் லாரியும் மோதிப் பெரும் விபத்துக்குள்ளானது.
அவ்விபத்தில் இருபது பேர் உயிரிழந்ததாகவும், இருபது பேர் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும் மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர் தெரிவித்துள்ளார். விபத்து நேர்ந்த தகவல் அறிந்த உறவினர்களும் குடும்பத்தினரும் நிகழ்விடத்துக்கு வந்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, காவல்துறைத் தலைமை இயக்குநர், தலைமைச் செயலாளர் ஆகியோரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நிகழ்விடத்திற்கு விரைந்து செல்லுமாறு உத்தரவிட்டார். மேலும் அவர் காயம் அடைந்தவர்களுக்கு உடனே உயர்தரச் சிகிச்சை அளிக்குமாறும் உத்தரவிட்டார்.
விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குப் பிரதமர் நரேந்திரமோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். காயமடைந்தோர் விரைவில் குணம்பெற இறைவனை வேண்டிக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தோர் குடும்பத்திற்கு இரண்டு இலட்ச ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.



