ஏரியில் பாய்ந்த கார் இளைஞர்கள் உயிரிழப்பு!

Advertisements

ஹைதராபாத்: 

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் எல்.பி. நகர் ஆர்டிசி காலனி பகுதியைச் சேர்ந்த வர்ஷா, தினேஷ், வம்சி, பாலு, விநாயக், மணிகண்டா ஆகிய 6 பேரும் யாதாத்ரி புவனகிரி மாவட்டம், பூதான் போச்சம்பல்லி கிராமத்துக்கு நேற்று அதிகாலையில் காரில் புறப்பட்டுச் சென்றனர்.

அனைவரும் 19 முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்களே. இவர்கள் சென்ற கார் ஜலால்பூர் சென்றபோது, ஒரு வளைவில் திடீரென நிலைதடுமாறி சாலையின் இடது புறம் உள்ள ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்தக் கோர விபத்தில் மணிகண்டா என்பவர் மட்டும் காரின் கண்ணாடியை உடைத்து உயிர் தப்பி உள்ளார். மற்ற 5 பேரும் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏற்கெனவே இரவு நடந்த பார்ட்டி யில் அனைவரும் மது அருந்தி உள்ளனர். அதன் பிறகு கள் குடிக்க வேண்டும் எனும் ஆசையில் அனைவரும் இரவோடு இரவாகக் காரில் சென்றபோது விபத்து நடந்துள்ளது.

காரையும், சடலங்களையும் போலீஸார் மீட்டனர். பின்னர் சடலங்களைப் பிரேத பரிசோதனைக்காகப் புவனகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, அப்பகுதி மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அடிக்கடி விபத்து நடக்கும் இந்த வளைவில் அறிவிப்புப் பலகை வைப்பதுடன் வேகத்தடை அமைக்க வேண்டும் எனப் பலமுறை கூறியும் எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லையென அவர்கள் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுப்பதாகப் போலீஸார் உறுதி அளித்தபின்னர் கிராம மக்கள் தங்களின் போராட்டத்தைக் கைவிட்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *