
‘கூரன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், எஸ்.ஏ. சந்திரசேகர் சினிமாவின் பொறுப்புணர்வு மற்றும் சமூக மாற்றம்குறித்து உரையாற்றினார். ‘கூரன்’ படத்தில் ஒய். ஜி. மகேந்திரன், சத்யன், பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான் போன்ற பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற ‘கூரன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்.ஏ. சந்திரசேகர் உரையாற்றும்போது, “என்னைப் பற்றி அனைவரும் பேசுகிறார்கள். இது கடவுளின் கொடுத்த பரிசு. நான் தொடர்ந்து ஓட வேண்டும், செயல்பட வேண்டும். மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறேன். எதையும் பாரமாகக் கருதவில்லை. கடைசி வரை உழைப்பேன். எப்போதும் வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும்” என்றார்.
வாழ்க்கையை எளிதாக அணுகினால், அது கடைசி வரை சிறப்பாக இருக்கும். சில திரைப்படங்களைப் பார்க்கும்போது, அது சிரமமாக இருக்கலாம். எழுத்தாளர்கள் உருவாக்கும் பாத்திரங்கள் முன்னணி மாதிரியாக இருக்க வேண்டும். அந்தப் பாத்திரம், இவனைப் போல வாழ வேண்டும் என்கிற வகையில் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.
கத்தி எடுத்துத் தலையை வெட்டுவது போன்ற காட்சிகளைப் பார்த்து வெளியே வரும் ஒருவர், கத்தி எடுத்துக் கையை வெட்டுவது, தலையை வெட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால், இளைய சமுதாயத்தின் நிலை என்ன ஆகும்? பொறுப்புணர்வு அவசியமாக இருக்கிறது. சினிமா என்பது சாதாரணமானது அல்ல. தற்போது சில நல்ல படங்கள் உருவாக்கப்படுகின்றன, அதில் நான் தவறு கூறவில்லை. ஆனால், ஒரு படம் பார்க்க நூறு பேர் வந்தால், ஒருவராவது மனமாற்றம் அடையும்படி படங்கள் இருக்க வேண்டும். இது வன்முறை இல்லாத படம், ஆனால் சக்தி வாய்ந்தது. வன்முறை இல்லாத முறையில் தான்.
