வட மாநில தொழிலாளர்கள் இருவர் அடித்துக் கொலை!

நாமக்கல்: 

பள்ளிபாளையம் அருகே வட மாநில தொழிலாளர்கள் இருவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாகப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் முன்னா (21), துகாஸ் (29). இவர்கள் இருவரும் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வெப்படையில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில், பள்ளிபாளையம் அருகே பாதரை டாஸ்மாக் மதுபான கடை அருகே இருவரும் சடலமாகக் கிடந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த வெப்படை போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து, போலீஸ் விசாரணையில், முன்னா, துபாஸ் உள்பட நான்கு பேர் டாஸ்மாக் மதுபான கடைக்கு வந்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் இருவரும் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாமெனப் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இதனிடையே, சம்பவ இடத்திற்கு சென்ற நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்பி ராஜேஷ் கண்ணன் தலைமையிலான போலீசார் நேரில் விசாரணை நடத்தினர். எனினும் சம்பவத்திற்கான காரணம் எதுவும் இதுவரை தெரியவில்லை. தொடர்ந்து வெப்படை போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *