
சென்னை: கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழும், மனைவியிடம் தகராறு செய்ததாக, முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., ராஜேஷ்தாஸை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கேளம்பாக்கம் காவல் நிலைய எல்லையில், தையூரில் ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், சுகாதாரத்துறை முன்னாள் செயலருமான பீலா வீடு உள்ளது. இவர், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த, ஐ.பி.எஸ்., அதிகாரி ராஜேஷ்தாசை காதலித்து, 1992ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு, பிங்கி, பிரீத்தியென இரண்டு மகள்கள் உள்ளனர்.
ராஜேஷ்தாஸ், அ.தி.மு.க., ஆட்சியில் சிறப்பு டி.ஜி.பி., யாகப் பணிபுரிந்தார். பின், பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிக்கி தண்டனை பெற்றார். அவரைக் கைது செய்யச் சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.
அதேநேரத்தில், கருத்து வேறுபாடு காரணமாக, ராஜேஷ் தாசிடமிருந்து விலகி, பீலா தனியாக வசித்து வருகிறார். அவர் சட்ட ரீதியாக விவாகரத்து பெறவும் முயற்சி செய்து வருகிறார். பிரிந்து இருக்கும் மனைவி பீலாவின் வீட்டிற்கு ராஜேஷ் தாஸ், 10 நபர்களுடன் சென்று, அத்துமீறி நுழைந்து தகராறு செய்துள்ளார்; காவலாளியையும் மிரட்டி உள்ளார். இதுகுறித்து, பீலா அளித்த புகாரில், கேளம்பாக்கம் போலீசார் ராஜேஷ் தாஸ் மீது வழக்குப் பதிவு செய்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டார்.


