மீண்டும் சரிந்தது இந்திய பேட்டிங்!

Advertisements

பிரிஸ்பேன்: 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்ட் முதல் இன்னிங்சில், இந்தியாவின் முன்னணி பேட்டர்கள் ஏமாற்றினர்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ‘பார்டர்-கவாஸ்கர்’ டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. மூன்றாவது டெஸ்ட் பிரிஸ்பேன் காபா மைதானத்தில் நடக்கிறது. 2வது நாள் முடிவில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 405/7 ரன் எடுத்திருந்தது. கேரி (45), ஸ்டார்க் (7) அவுட்டாகாமல் இருந்தனர்.

பும்ரா ‘ஆறு’:

நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. ஸ்டார்க் (18), பும்ரா பந்தில் அவுட்டானார். ஆஸ்திரேலியா 435/8 ரன் எடுத்தபோது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மீண்டும் போட்டி துவங்கியதும் சிராஜிடம் லியான் (2) சிக்கினார். கேரி, 70 ரன் எடுத்தார். ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 445 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்தியாவின் பும்ரா, 6 விக்கெட் வீழ்த்தினார்.

சரிந்த ‘டாப்’:

இந்திய அணிக்கு வழக்கம்போல ‘டாப் ஆர்டர்’ வீரர்கள் அதிர்ச்சி கொடுத்தனர். அடிலெய்டு டெஸ்டில் ஸ்டார்க் வீசிய முதல் பந்தில் அவுட்டான ஜெய்ஸ்வால், இம்முறை முதல் பந்தில் பவுண்டரி அடித்தார். மாறாக அடுத்த பந்தில் ஜெய்ஸ்வால் (4), அவுட்டாகினார்.

தனது அடுத்த ஓவரில் சுப்மனை (1) வெளியேற்றினார் ஸ்டார்க்.

மறுபக்கம், பந்தை ஸ்டம்சிற்கு வெளியே செல்லுமாறு வீசினார் ஹேசல்வுட். வழக்கம்போல இதை அடிக்க முற்பட்ட கோலி (3), ‘கேட்ச்’ கொடுத்துத் திரும்பினார். இந்தியா 22/3 ரன் எடுத்தபோது மழை குறுக்கிட்டது. போட்டி துவங்கியதும் ரிஷாப் (9) அவுட்டானார். கடைசியில், போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 51/4 ரன் எடுத்து, 394 ரன் பின் தங்கி இருந்தது. ராகுல் (33), ரோகித் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

இன்றும் மழை:

நேற்று இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. 17 ஓவர் வீசுவதற்குள் மழையால் 4 முறை ஆட்டம் நிறுத்தப்பட்டு, மீண்டும் தொடர்ந்தது. இன்று 4வது நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்படலாம். இந்திய வீரர்கள் சுதாரித்து விளையாடினால் ‘டிரா’ செய்யப் போராடலாம்.

33 ஓவர்:

பிரிஸ்பேன் டெஸ்டில் மழை அதிகம். முதல் நாளில் 13.2 ஓவர் மட்டும் வீசப்பட்டன. நேற்று 3வது நாளில் 33.1 ஓவர் மட்டும் வீசப்பட்டன.

ஸ்டார்க்கை அவுட்டாக்கினார் பும்ரா. ஆஸ்திரேலிய மண்ணில், 50 வது விக்கெட் என்ற மைல்கல்லை எட்டிய 2வது இந்தியர் ஆனார். கபில்தேவ் (51) முதலிடத்தில் உள்ளார்.

* ஆசிய மண்ணுக்கு வெளியே, டெஸ்டில் 50 விக்கெட், அதற்கும் மேல் சாய்த்த 3வது இந்திய பவுலர் பும்ரா. கபில்தேவ் (51, ஆஸி.,), இஷாந்த் சர்மா (51, இங்கிலாந்து) முதல் இரு இடத்தில் உள்ளனர்.

* பிரட் லீ (2061, ஆஸி., ), ரிச்சர்டு ஹாட்லீக்கு (2117, நியூசி., ) அடுத்து ஆஸ்திரேலியாவில் குறைந்த பந்தில் 50 விக்கெட் சாய்த்த பவுலர் பும்ரா (2141 பந்து).

* அன்னிய மண்ணில் 4வது முறையாக, 6 விக்கெட் அல்லது அதற்கும் மேல் எனச் சாய்த்தார் பும்ரா. கபில்தேவ், இஷாந்த், எரபள்ளி பிரசன்னா இதுபோல விக்கெட் வீழ்த்தினார். சந்திரசேகர் (5 முறை), கும்ளே (5) முதலிடத்தில் உள்ளனர்.

‘பாலோ ஆன்’ தவிர்க்குமா:

பிரிஸ்பேன் டெஸ்ட் முதல் இன்னிங்சில் இந்தியா குறைந்தது 246 ரன் எடுக்க வேண்டும். இல்லை எனில் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை விளையாடும் நிலைக்கு (‘பாலோ ஆன்’) தள்ளப்படலாம்.

* கடைசியாக 2001 கோல்கட்டா டெஸ்டில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 445 ரன் எடுத்தது. இந்தியா 171 ரன் மட்டும் எடுக்க, ‘பாலோ ஆன்’ பெற்றது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 657/7 ரன் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. பின் ஆஸ்திரேலியாவை (212) வென்றது.

இஷா குஹா மன்னிப்பு:

பிரிஸ்பேன் டெஸ்ட் முதல் இன்னிங்சில் (2வது நாள்) ஆஸ்திரேலிய துவக்க வீரர்களை, பும்ரா அவுட்டாக்கினார். அப்போது வர்ணனை செய்த இஷா குஹா 39,’ இந்தியாவின் விலை மதிப்பு மிக்க ‘பிரிமேட்’ (Primate) பும்ரா,’ என்றார். அதாவது ஒருவகையான குரங்கினத்தின் ஆங்கிலப் பெயர் பிரிமேட்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் வீராங்கனை, கோல்கட்டாவை பூர்விகமாகக் கொண்ட இஷா குஹா, இப்படி பேசியது பெரும் சர்ச்சை கிளப்பியது. பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு எழுந்தன.

இதையடுத்து நேற்று ‘டிவி’ நேரலையில், மன்னிப்பு கேட்டார். அவர் கூறுகையில்,” பும்ரா சாதனைகுறித்து பேசும்போது, தவறான வார்த்தையைப் பயன்படுத்தி விட்டேன். இதற்காக மிகவும் வருந்துகிறேன்,” என்றார்.

இந்திய அணி முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில்,” நாம் அனைவரும் மனிதர்கள் தான். தவறு ஏற்படுவது இயற்கை தான். குஹா துணிச்சலான பெண். நேரடி ஒளிபரப்பில் மன்னிப்பு கேட்டுள்ளார்,” என்றார்.

இதற்கு முன்…

கடந்த 2008, சிட்னி டெஸ்டில், ஹர்பஜன் சிங் (இந்தியா) தன்னை ‘குரங்கு’ எனத் திட்டினாரெனக் கூறி, இனவெறி சர்ச்சை கிளப்பினார் ஆஸ்திரேலிய வீரர் சைமண்ட்ஸ். இதனால், தொடரைப் பாதியில் ரத்து செய்துவிட்டு, இந்தியா நாடு திரும்பும் நிலை ஏற்பட்டது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *