
சென்னை:
காதலியைக் கொலை செய்து சடலத்தின் மீது ரசாயனத்தை ஊற்றிப் பதப்படுத்திய மருத்துவரைப் போலீஸார் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த ஆவடி திருமுல்லைவாயல், திருமலைவாசன் நகர் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகை வீட்டில், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாமுவேல் சங்கர் (78). அவரது மகள் சிந்தியா (37) ஆகியோர் தங்கியிருந்தனர். சிந்தியா கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். சாமுவேல் சிறுநீரக பாதிப்புக்காகச் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கும் மேலாகச் சாமுவேல் வீடு பூட்டப்பட்டிருந்தது. அவர்கள் வீட்டைக் காலி செய்துவிட்டு வேறு இடத்துக்குச் சென்றுவிட்டதாக அக்கம் பக்கத்தினர் நினைத்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று அந்த வீட்டிலிருந்து அதிக அளவில் துர்நாற்றம் வீசியுள்ளது. அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, திருமுல்லைவாயல் போலீஸார் பூட்டை உடைத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, 2 உடல்கள் அழுகிய நிலையில் கிடந்தன. அவை, சாமுவேல், சிந்தியாவின் சடலங்கள் என்ற முடிவுக்கு வந்த போலீஸார் அவற்றை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து, போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை தொடங்கினர். இதில், காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை பாரதி தாசன் நகரைச் சேர்ந்த ஓமியோபதி மருத்துவர் சாமுவேல் எபினேசர் (34) என்பவர் சிந்தியாவுடன் அடிக்கடி பேசி வந்ததும், வாட்ஸ்-அப்பில் தகவல்களைப் பரிமாறி இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து எபினேசரை பிடித்துத் தனியாக விசாரித்தனர்.
அப்போது, அவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்னரே சிந்தியாவை அடித்துக் கொலை செய்த சம்பவம் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், ”கருத்து வேறுபாடு காரணமாகக் கணவரைப் பிரிந்து வாழ்ந்த சிந்தியாவுக்கு மருத்துவரான சாமுவேல் எபினேசருடன் இன்ஸ்டா கிராம் மூலம் சில ஆண்டுகளுக்கு முன்னர் நட்பு ஏற்பட்டுள்ளது.
பின்னர், இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளனர். எபினேசர் மருத்துவர் என்பதால், அவரது ஆலோசனைப்படி, பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனது தந்தைக்கு சிகிச்சை அளித்துள்ளார் சந்தியா.
இதற்காகத் திருமுல்லைவாயலில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு பார்த்துக் கொடுத்துள்ளார் எபினேசர். இதையே சாதமாகப் பயன்படுத்தி, சிந்தியா வீட்டுக்கே அடிக்கடி சென்று அவரது தந்தைக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளித்துள்ளார். இதனால் சந்தியாவுடன் அவருக்கு நெருக்கம் அதிகமாகி உள்ளது.
கொலை நடந்தது எப்படி?:
கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் முதியவர் சாமுவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால், வேதனை அடைந்த சிந்தியா, தந்தையின் இறப்புக்கு எபினேசரின் சிகிச்சை குறைபாடே காரணம் எனக் கூறி அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
இந்த வாக்குவாதம் மோதலாக மாறியுள்ளது. இதில், பிடித்துத் தள்ளியதில் சிந்தியா எதிர்பாராத விதமாகக் கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்தாகக் கூறப்படுகிறது. இதைச் சற்றும் எதிர்பாராத எபினேசர் கொலையை மறைக்க முடிவு செய்துள்ளார்.
முதல் கட்டமாக இருவரின் சடலத்தையும் அறை ஒன்றில் வைத்துப் பூட்டிவிட்டு ஏசியை ஆன் செய்து வைத்துவிட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர், ரசாயனத்தை வாங்கி வந்து அதை இருவரிடன் சடத்தின் மீதும் ஊற்றிப் பதப்படுத்தி உள்ளார். இதனால், உடல் அழுகினாலும் பெரிய அளவில் துர்நாற்றம் வீசவில்லையெனப் போலீஸார் தெரிவித்தனர்.
