அடுத்தடுத்து 2 திருமணங்கள் செய்து கணவர்களுக்கு அல்வா கொடுத்து எஸ்கேப்பாகி, கதற விட்டிருக்கிறார் கோவில்பட்டியைச் சேர்ந்த கார்த்திகா. மூன்றாவது மாப்பிள்ளைக்கு வலை விரித்திருக்கும் அந்த தில்லாலங்கடி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு…
இந்தப் பூனையும் பால்குடிக்குமா என பார்ப்பதற்கு அப்பாவி போல் காட்சி அளிக்கும் இவர்தான், அடுத்தடுத்து 2 திருமணங்கள் செய்து கணவர்களை ஏமாற்றிய கல்யாணராணி கார்த்திகா.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகர் 6-வது தெருவைச் சேர்ந்த கார்த்திகாவுக்கும், தஞ்சாவூர் மாவட்டம் உப்புண்டார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சித்தார்த்தன் என்பவருக்கும் கல்யாண புரோக்கர் மூலமாக வரன் பார்த்து,
கடந்த செப்டம்பர் மாதம், 13 ஆம் தேதி, தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் 15 இலட்சம் ரூபாய் செலவில் ஜாம் ஜாமென திருமணம் நடந்துள்ளது. புரோக்கர்களுக்கு கமிஷனாக 3 இலட்சம் ரூபாய் கொடுத்ததோடு, மணமகளுக்கும் 3 பவுன் தங்க நகை போட்டு மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நடத்தியுள்ளனர்.
ஆனால் திருமணம் முடிந்த இரண்டாவது நாளிலேயே தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி அவரைப் பார்க்கவேண்டும் என கண்ணீர் விட,அதனை நம்பிய புதுமாப்பிள்ளை சித்தார்த்தன், கார்த்திகாவைக் கொண்டு வந்து கோவில்பட்டியில் விட்டதோடு, மருத்துவச் செலவுக்காகப் பணமும் கொடுத்து சென்றுள்ளார்.
ஓரிரு நாட்கள் கழிந்தும், கார்த்திகா திரும்பி வராததால், சித்தார்த்தன் போன் செய்தபோது, கார்த்திகவின் பெற்றோரான முனீஸ்வரி, மாரியப்பன் தம்பதி இப்போது வந்துவிடுவார், அப்போது வந்துவிடுவார் என அலைக்கழித்துள்ளனர்.தலைத் தீபாவளி என்பதால் மனைவியை வருமாறு சித்தார்த்தன் அழைத்தபோதும், மருத்துவமனை, சிகிச்சை எனத் தொடர்ந்து காரணங்களைக் கூறி வந்துள்ளனர்.
இதனால் பொறுமையிழந்த சித்தார்த்தன், தனது உறவினர்களுடன் 21-ஆம் தேதி காலை கோவில்பட்டி ராஜீவ் நகரில் உள்ள கார்த்திகாவின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு கார்த்திகா இல்லை. அவரது பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாததால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு ரத்தம் வாங்குவதற்காக கார்த்திகா மதுரைக்குச் சென்றிருப்பதாகவும், முனீஸ்வரியும் மாரியப்பனும் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே அங்குவந்த நாமக்கல் மாவட்டம் பூச்சத்திரம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவர், தனது மனைவி கார்த்திகா எங்கே என்று கேட்டுள்ளார்.தனது மனைவி குறித்து இவர் விசாரிக்கிறாரே என அதிர்ச்சி அடைந்து, சித்தார்த்தன் என்ன ஏதென்று கேட்க, இந்த நவம்பர் மாதம் 1ஆம் தேதி, பூச்சத்திரத்தில் உள்ள கோயிலில் வைத்து தனக்கும் கார்த்திகாவுக்கும் திருமணம் நடந்ததாக ரஞ்சித்குமார் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ரஞ்சித்குமார், சித்தார்த்தனைப் பார்த்து நீங்கள் யார் எனத் திரும்பிக் கேட்க, இரண்டு 2 மாதங்களுக்கு முன்பே கார்த்திகாவுக்கு தாலிகட்டிய கணவன் என அவர் கூறியிருக்கிறார்.அப்போதுதான் கார்த்திகா இரண்டு பேரையும் திருமணம் செய்து ஏமாற்றியிருப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த இரு மாப்பிள்ளைகளும், முனீஸ்வரி – மாரியப்பனிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது அவளுக்குப் பிடிக்கவில்லை எனச் சொல்லிவிட்டாள்.இப்போது அவள் மருத்துவமனைக்கு சென்றுவிட்டால், நீங்கள் வேண்டுமானால், போலீசில் புகார் செய்யுங்கள் எனக் கூறவே மூன்று தரப்பினர் இடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் வந்து விசாரித்தபோது, முனீஸ்வரியும், மாரியப்பனும் பெற்றோர் இல்லை, சித்தி சித்தப்பா என்பதும், மாரியப்பன் புரோக்கராக இருந்ததும் தெரியவந்தது.இதனைத் தொடர்ந்து, இரு மாப்பிள்ளை வீட்டாரையும், மாரியப்பன் மற்றும் முனீஸ்வரியையும் போலீசார் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
சித்தார்த்தன் மற்றும் ரஞ்சித்குமார் அளித்த புகார்களின் அடிப்படையில், கார்த்திகா, மாரியப்பன், முனீஸ்வரி ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார்த்திகா தற்போது எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. இதற்கிடையே, போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோதே தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், மயக்கம் வருவதாகவும் முனீஸ்வரி கூறியுள்ளார். இதையடுத்து, அவரைச் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை நடத்தி வருவதாகவும், கார்த்திகாவைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.மேலும், சித்தார்த்தன், ரஞ்சித்குமார் ஆகிய இருவரைத் தவிர இந்தக் கும்பல் வேறு யாரையாவது ஏமாற்றியுள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், மூன்றாவதாக மதுரையைச் சேர்ந்த ஒருவருக்கும் கார்த்திகாவைத் திருமணம் செய்து வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்த நிலையில் போலீசார் கார்த்திகா தரப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டு,மாரியப்பன் – முனீஸ்வரி ஆகிய இரண்டு பேரையும் காவல் நிலைய ஜாமினில் விடுவித்துள்ளதாகவும் சித்தார்த்தன் மற்றும் ரஞ்சித் குமார் ஆகியோர் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரை காவல்துறை மாற்றி, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர் சரவணன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கார்த்திகா பிடிபட்ட பின்னரே உண்மையில் அவர் பெயர் அதுதானா? இல்லையா என்பதும், இதுவரை இரண்டு பேரை மட்டும்தான் கார்த்திகா ஏமாற்றினாரா என்பதும், இந்தத் திருமண மோசடியின் பின்னணியில் உள்ள உண்மைகளும் காவல் துறையின் முறையான விசாரணைக்குப் பின்னரே வெளியாகும்..கார்த்திகா சிக்கும்வரை, அவரிடம் யாரும் சிக்காமல் இருக்க வேண்டும்..