விவசாயிகள் விளைவித்த நெல்லைக் கூட உடனடியாக கொள்முதல் செய்ய முடியாதது தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மையை வெளிப்படுத்துவதாக அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில், தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள், விவசாயிகளின் உழைப்பில் உற்பத்தியான நெல்லை உரிய நேரத்தில் கொள்முதல் செய்ய மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார்.
இயற்கையின் சவால்களையும், இடர்பாடுகளையும் எதிர்கொண்டு, மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் மகத்தான பணியில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், அரும்பாடுபட்டு விளைவித்த நெல்லை உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்திக் கொண்டிருப்பதே, மழையில் நெல் மூட்டைகள் நனைந்து வீணாவதற்கு அடிப்படை காரணமாக அமைந்துள்ளதாகக் கூறியுள்ளார். காவிரி நீர் பற்றாக்குறை, கடுமையான வறட்சி, பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்றம், பொய்த்து போன குறுவை சாகுபடி ஆகியவற்றால் உணவு உற்பத்தி குறைந்து அரிசி விலையும் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், விவசாயிகள் விளைவித்த நெல்லை கூட உடனடியாக கொள்முதல் செய்ய முடியாதது தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மையை வெளிப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
எனவே, நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள் அனைத்தையும் உடனடியாக கொள்முதல் செய்திடுவதோடு, அவற்றை முறைப்படி கிடங்குகளுக்கும், அரவை ஆலைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்தியுள்ளார்.



