கோவையில் கொடூரக் கொலை.. காட்டிக் கொடுத்தது யார்? கொந்தளித்த உதயநிதி.!

Advertisements

ஒத்தக்கால்மண்டபம் பூங்கா நகர் பகுதியில் உள்ள வாடகை வீட்டில், இரண்டாம் ஆண்டு சிவில் இன்ஜினியரிங் படித்து வந்த 18 வயதான இளவரசன் தனது நண்பர்களுடன் தங்கியிருந்தார். கடந்த 10-ஆம் தேதி அதிகாலை சுமார் 5.30 மணியளவில் அங்கு புகுந்த ஒரு கும்பல், அவர்களை மிரட்டி தாக்கியதுடன், செல்போன் ஒன்றையும் எடுத்துச் சென்றதாக புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து இளவரசன் அளித்த புகாரின் பேரில், செட்டிபாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஹிந்துஸ்தான் கல்லூரியில் படித்து வந்த அமுதன் என்பவரும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களில் ஒருவர் என தெரியவந்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, அதே நாள் காலை சுமார் 8.30 மணியளவில் அமுதனும் அவரது நண்பர் 19 ஏ வயதான ஸ்ரீமன் என்பவரும் மலுமிச்சம்பட்டி அருகே ஹிந்துஸ்தான் கல்லூரியை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது, அதிகாலையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்புடன் தொடர்புடைய சிலர், அமுதனை அந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களில் ஒருவர் என அடையாளம் கண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அமுதன் மற்றும் ஸ்ரீமனை வழிமறித்த அவர்கள், இருவரையும் **ஹிந்துஸ்தான் கல்லூரியின் பின்புறம் உள்ள மைதானத்திற்கு அழைத்துச் சென்று தாக்கியதாக** போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. தாக்குதலுக்குப் பின்னர் அமுதன் காலை சுமார் 10 மணியளவில் தனது அறைக்குத் திரும்பியுள்ளார். பின்னர், பிற்பகல் சுமார் 3 மணியளவில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அமுதன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து ஸ்ரீமன் அளித்த புகாரின் பேரில், செட்டிபாளையம் காவல் நிலையத்தில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக 5 கல்லூரி மாணவர்கள் விசாரணைக்காக பிடிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களை அடையாளம் கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், அமுதன் மீது நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல், அன்று அதிகாலை பூங்கா நகர் பகுதியில் நடைபெற்ற முந்தைய தாக்குதல் சம்பவத்தின் தொடர்ச்சியாகவும், அந்த சம்பவத்தில் அமுதனுக்கு இருந்ததாக கூறப்படும் தொடர்பின் காரணமாகவும் நடைபெற்றிருக்கலாம் என தெரியவந்துள்ளது.

இதனிடையே, அமுதன் கடந்த மாதம் ஹிந்துஸ்தான் கல்லூரி விடுதியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. விடுதியில் பணிபுரியும் சமையலர் ஒருவரை அமுதன் தாக்கியதாக கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கல்லூரி நிர்வாகம் அவரை விடுதியிலிருந்து இடைநீக்கம் செய்திருந்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவங்களின் முழுமையான பின்னணி, தாக்குதலில் ஈடுபட்ட ஒவ்வொருவரின் பங்கு உள்ளிட்டவை குறித்து காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணையில் கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில், சம்பவத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் பாதிப்படைந்துள்ளது. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. திமுக ஆட்சியில் இருந்த சட்டம் ஒழுங்கு பாதிப்பு தவெக ஆட்சியிலும் தொடர்கிறது. கோவையில் போதை கும்பல் குறித்து புகாரளித்த கல்லூரி மாணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மாணவன் கொலை குறித்து சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.கோவை கல்லூரி மாணவர் போதை கும்பலால் கொலை செய்த சம்பவம் குறித்து சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கவன ஈர்ப்பு தினம் கொண்டு வந்தார். அப்போது பேசிய உதயநிதி, “தமிழகத்தில் கடந்த 3 நாட்களில் 4 கொடூர சம்பவம் நடந்துள்ளது.

போதை பொருட்களை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுதான் காவல்துறையின் பணி. ஆனால் போதை பொருள் விற்பனை செய்தவர்களை அழைத்து, புகார் சொல்லியவரின் விபரங்களை சொல்லியுள்ளனர்.அந்த கோபத்தில்தான் கோவை கல்லூரி மாணவர் அமுதனை போதை கும்பல் அடித்து கொலை செய்ததாக, அவரின் பெற்றோர் ஊடகங்களில் பேட்டியளித்துள்ளனர். காவல்துறை ஏன் அலட்சியமாக நடந்து கொள்கிறது என்று இந்த அரசு விளக்கம் கொடுக்க வேண்டும்.

இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் அரசு பார்த்து கொள்ள வேண்டும். மாணவர் அமுதனின் கொலைக்கு நிச்சயமாக நீதி கிடைக்க வேண்டும்” என்றார்.அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஜே.சி.டி பிராபகர், “திங்கள் கிழமை இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை எடுத்து கொள்வதாக கூறியுள்ளோம். இதுபோதும்ங்க. நடந்த சம்பவம் அனைத்தையும் கூறிவிட்டீர்கள். திங்கள்கிழமை இதைப்பற்றி விரிவாக பேச அனுமதிக்கிறேன்.

நீங்கள் கொடுத்த தீர்மானத்தின்படி, கோயம்புத்தூர் தனியார் கல்லூரியில் போதை பொருள் பயன்பாடு குறித்து புகாரளித்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த அமுதன் என்பவரை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளனர்.மாணவருக்கு ஏற்பட்டுள்ள பதற்ற நிலை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று சொல்லியுள்ளீர்கள். உங்கள் கவலைகளை சொல்லிவிட்டீர்கள். நாங்கள் எடுத்து கொள்கிறோம். முழு விபரத்தை சேகரித்து அரசு பதில் அளிக்கும்.

உங்கள் கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு திங்கள் கிழமை பதில் வரும்” என்றார். இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, உடனடியாக பதில் தெரிவிக்க வேண்டும் என கேட்டனர்.அமைச்சர் ராஜ்மோகன் அளித்த பதிலில், “கோவை மாவட்டம் இந்துஸ்தான் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை பொறுத்தவரை, மாணவருக்கு மற்ற மாணவர்களுடன் ஏற்கனவே இருந்த மோதல் காரணமாக என அவர் பேசிக் கொண்டிருக்கும்போது”, திமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *