
ஊழல் வழக்கிலிருந்து செந்தில்பாலாஜியைக் காப்பாற்ற திமுக அரசு முயல்வதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் மக்களிடம் மு.க.ஸ்டாலின் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இரண்டாயிரத்துக்கு மேற்பட்டோரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் அவரைக் காப்பாற்றும் நோக்கத்துடன் திமுக அரசு செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
செந்தில் பாலாஜியிடம் பணம் கொடுத்து ஏமாந்த அப்பாவிகள் உள்ளிட்ட இரண்டாயிரம் பேரை அந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களாகச் சேர்த்துள்ளது நீதி வழங்கும் அமைப்பின் மீது நடத்தப்படும் மோசடி என்று உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
குற்றம் செய்தவர்களைத் தண்டித்து அப்பாவிகளைக் காக்க வேண்டிய தமிழக அரசு, அப்பாவிகளைத் தண்டித்துக் குற்றம் செய்தவர்களைக் காக்க முயல்வதாக அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். இதற்காகக் காவல்துறையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்றும், நீதி தவறிய செயலுக்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கிலிருந்து அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்களை நீக்கி விட்டு, அந்த வழக்கை வேறு மாநில நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.


