ஆபாச நடிகை வழக்கில் டிரம்பிற்கு இன்று தண்டனை அறிவிப்பு!

Advertisements

வாஷிங்டன்:

Advertisements

அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றுள்ள டிரம்ப் 10 நாட்களில் அதிபராகப் பதவியேற்க உள்ள நிலையில், ஆபாசப் பட நடிகைக்குப் பணம் கொடுத்த வழக்கில் டிரம்பின் தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளது. டிரம்ப் ஒருவேளை சிறை செல்ல நேரிட்டால் அவரால் அதிபராகப் பதவியேற்க முடியுமா என்பதில் பலருக்கும் கேள்வி எழுந்துள்ளது.

அமெரிக்காவில் கடந்தாண்டு நடந்த அதிபர் தேர்தலில் வென்றவர் டிரம்ப். அங்குத் தேர்தல் கடந்த நவம்பர் மாதமே முடிந்தாலும் கூட, அவர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அதிபராகப் பதவியேற்கவில்லை.அவர் வரும் ஜனவரி 20ம் தேதி தான் அமெரிக்க அதிபராகப் பதவியேற்க இருக்கிறார். அதற்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் சூழலில் ஆபாசப் பட நடிகைக்குப் பணம் கொடுத்த வழக்கில் டிரம்பிற்கான தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளது.

ஆபாச நடிகை விவகாரம்:

அமெரிக்க அதிபராக இதற்கு முன்பும் 2016 முதல் 2021 வரை அதிபராக இருந்தவர் டிரம்ப். அந்தக் காலகட்டத்திலேயே இவர்மீது ஏகப்பட்ட சர்ச்சைகள் எழுந்தன. குறிப்பாக ஆபாசப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் என்பவருக்குப் பணம் கொடுத்த விவகாரத்தில் டிரம்ப் சிக்கினார். அந்தப் பிரச்சினை இப்போது வரை டிரம்பை தொடர்கிறது.

அதாவது டிரம்பிற்கும் மெலனியாவுக்கும் இடையே 2005ம் ஆண்டிலேயே திருணம் நடந்தது. இருப்பினும், திருமணத்திற்கு பிறகும் டிரம்ப் பல பெண்களுடன் உறவில் இருந்ததாக்க கூறப்படுகிறது. அப்படியொரு சமயம் மெலனியா கருவுற்று இருந்தபோது, ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுடன் டிரம்ப் நெருக்கமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

டிரம்ப் குற்றவாளியென அறிவிப்பு:

2016 அதிபர் தேர்தலில் டிரம்ப் முதல்முறையாகக் களமிறங்கிய நிலையில், அப்போதே இந்த விவகாரம் பெரிதாக வெடிக்கலாமெனச் சொல்லப்பட்டது. இதை அறிந்த டிரம்ப் தரப்பு, தன்னுடன் இருந்த உறவு தொடர்பாகப் பொதுவெளியில் பேசக் கூடாது என்று ஒப்பந்தம் போட்டு, அதற்கு ஒரு 1.30 லட்சம் டாலரை கொடுத்துள்ளார்.

அமெரிக்காவில் இதுபோல ஒப்பந்தம் போட்டுப் பணம் கொடுப்பது தப்பில்லை. ஆனால், இந்த நிதியைத் தேர்தல் நிதி என்று கணக்குக் காட்டியதே சர்ச்சையாக வெடித்தது.

வழக்கு நடந்தபோது, டிரம்ப் சார்பில் பணம் கொடுத்த வழக்கறிஞர் கூட டிரம்பிற்கு எதிராகச் சாட்சியம் அளித்தார். இதனால் டிரம்ப் மீது 34 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட சூழலில், அனைத்து குற்றங்களும் நிரூபிக்கப்பட்டு குற்றவாளியென அறிவிக்கப்பட்டார். டிரம்ப் அமெரிக்க அதிபராக இன்னும் 10 நாட்களில் பதவியேற்கும் சூழலில், அவரது தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளது.

இன்று தண்டனை விவரங்கள்:

கடைசி நேரத்தில் தண்டனை அறிவிப்பைத் தடுக்க டிரம்ப் தரப்பு உச்ச நீதிமன்றம்வரை சென்று முறையிட்டது. இருப்பினும், தண்டனை அறிவிக்கத் தடை விதிக்க முடியாது என்று சொல்லச் சுப்ரீம் கோர்ட் டிரம்பின் மனுவை டிஸ்மிஸ் செய்துவிட்டது.

இதனால் இன்று டிரம்பிற்கான தண்டனை விவரங்கள் வெளியாக உள்ளது. இந்திய நேரப்படி இன்று இரவு 9 மணியளவில் டிரம்பின் தண்டனை தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளது.

இந்தக் குற்றச்சாட்டிற்காக 4 ஆண்டுகள்வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும். இருப்பினும், டிரம்பிற்கு சிறைத் தண்டனை விதிக்க வாய்ப்பு குறைவு என்றே சொல்லப்படுகிறது. டிரம்ப் குற்றவாளி என்பது மட்டும் அவரது ரெக்கார்ட்டில் பதிவு செய்யப்பட்டு, சிறைத் தண்டனை விதிக்கப்படாது என்றே அந்நாட்டுச் சட்ட வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.

பதவியேற்க முடியுமா?

மேலும், அமெரிக்க சட்டப்படி ஒருவர் சிறைக்குச் சென்றால் அதிபராகப் பதவியேற்க முடியாது என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை. அதிபர் தேர்தலில் வெல்வது உட்பட தேவையான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் போதும்.! சிறைத் தண்டனை விதிக்க வாய்ப்பு கம்மி என்றாலும் கூட அப்படியே விதிக்கப்பட்டாலும் கூட அவரால் அதிபராகப் பதவியேற்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *