
அமெரிக்காவில் நடு வானில் ராணுவ ஹெலிகாப்டர் பயணிகள் விமானத்தில் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 67 பேர் உயிரிழந்தனர்.
கடந்த புதன்கிழமை இரவு தலைநகர் வாஷிங்டனில் ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது ஜெட் விமானத்தின் பாதையில் பறந்து சென்றபோது விபத்து ஏற்பட்டது.
விமானத்தில் 60 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் இருந்தனர். ஹெலிகாப்டரில் மூன்று வீரர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் கூட உயிர்பிழைக்காதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்துக்குச் சற்றுமுன் வரை ராணுவ விமானியின் நடவடிக்கைகளை ஆராய்ந்த அதிகாரிகள், இந்த விமான பேரழிவு ஏற்பட்ட நேரத்தில் விமான நிலையத்தின் தரை கட்டுப்பாட்டு ஊழியர்கள் வழக்கத்தைவிட குறைவான எண்ணிக்கையில் இஇருந்ததாகத் தெரிவித்தனர்.
ஃபெடரல் ஏவியேஷன் அறிக்கையின்படி, மோதல் நடந்தபோது, ரீகன் நேஷனலில் உள்ள கோபுரத்தில் இரண்டு பேருக்கு ஒதுக்கப்பட்ட பணியை ஒரு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் மட்டுமே செய்துகொண்டிருந்தார் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
2001 ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்காவில் நடந்த மிக மோசமான விமான விபத்து இதுவாகும். மோதலுக்கான காரணம்குறித்து உடனடி தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில் இந்த விபத்துக்கு முன்னாள் அதிபர்கள் ஜோ பைடன் மற்றும் பராக் ஒபாமாவே காரணம் எனத் தற்போதைய அதிபர் டொனல்டு டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
விமான விபத்துகுறித்து வெள்ளை மாளிகையில் நேற்று [வியாழக்கிழமை] செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப், ஒபாமாவும் பைடனும் குடிமக்களின் பாதுகாப்புக்குப் பதிலாக இடது சாரி பன்முகத்தன்மை கொள்கைக்கு முன்னுரிமை கொடுத்தனர்.
அதனால் விமானப் போக்குவரத்துத் துறையில் இருந்த திறமையானவர்கள் வெளியேற்றப்பட்டனர். 2016 இல் நான் அதிபரானபோது, அறிவுத்திறன் மற்றும் உளவியல் ரீதியாக மேம்பட்டவர்களை மட்டுமே விமான கட்டுப்பாட்டாளர்களாகத் தேர்ந்தெடுக்க அனுமதித்தேன்.
ஆனால் 2020 இல் ஜோ பைடன் அதிபரான பிறகு விமான துறையை முன்பைவிட தரம் குறைந்ததாக மாற்றினார். இந்த விபத்துகுறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன்.
விபத்தில் உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு அனைத்து விதமான உதவிகளும் செய்து தரப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் இதுவரை 28 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் மற்ற உடல்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
