தொலைதூரம் செல்லக்கூடிய பேருந்துகள் இன்று நள்ளிரவு 11.59 மணிவரை மட்டுமே இயக்கப்படும் எனத் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கம் ஏற்கனவே வேலை நிறுத்தத்தினை அறிவித்திருந்தது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுடன் இன்று இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், நாளை முதல் அதாவது ஜனவரி 9ஆம் தேதிமுதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இதனால் பொங்கலுக்கு சொந்த ஊருக்குச் செல்ல பொதுமக்கள் பயன்படுத்தும் பேருந்துகளின் எண்ணிக்கை போதுமான அளவிற்கு இயக்கப்பட வாய்ப்பில்லை என கூறப்படுகின்றது. இதனால் தமிழ்நாடு அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சென்னை: 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திப் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நாளை முதல் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளன. போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்ததால் திட்டமிட்டபடி நாளைப் போராட்டம் தொடங்கும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இந்த நிலையில், திருச்சியில் பேருந்துகள் இயக்கம் தற்போதே குறையத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாகச் சி.ஐ.டி.யு, தொழிற்சங்கத்தின் சவுந்தரராஜன் அளித்தப் பேட்டியில் கூறியதாவது:
பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் பேருந்துகள் இயக்கம் படிப்படியாகக் குறைக்கப்படும் என்றும் நள்ளிரவுக்கு மேல் எந்தப் பேருந்துகளும் ஓடாது. தொலைதூரம் செல்லக்கூடிய பேருந்துகள் இன்று நள்ளிரவு 11.59 மணிவரை மட்டுமே இயக்கப்படும். நீண்ட தூரம் செல்லும் பேருந்துகள் நாளைக் காலைச் சம்மந்தப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பயணிகளை இறக்கி விட்டபின் நிறுத்தி வைக்கப்படும்” என்றார்.