
சென்னை, மதுரை கோவை உள்ளிட்ட நகரங்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமான பஸ்கள் இயங்கி வருகின்றன. கன்னியாகுமரி நாகர்கோவிலில் சில பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னை: தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக் அறிவித்திருந்தாலும், தமிழகம் முழுவதும் பெரும்பாலான பஸ்கள் இயங்கியது. முன்பதிவு செய்தவர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும், பெரும்பாலான பஸ்கள் இயக்கப்பட்டு வருவதாகப் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் கூறியுள்ளார். சென்னையில் மொத்தம் உள்ள 3,092 பஸ்களில் 2,749 பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆவடி பணிமனையிலிருந்து 100 சதவீத பஸ்கள் இயங்குகிறது.சேலத்தில் 1,063 பஸ்கள் இயங்குகிறது. மயிலாடுதுறையில் 55 பஸ்களில் 44 பஸ்கள் இயங்குகிறது.
தமிழகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்திருந்தன.தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் இன்று ஜனவரி 09ம் தேதி காலை 6 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாகச் சங்கங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போலீஸ் பாதுகாப்புடன் தற்காலிக ஊழியர்களைக் கொண்டு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை, மதுரை கோவை உள்ளிட்ட நகரங்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமான பஸ்கள் இயங்கி வருகின்றன. கன்னியாகுமரி நாகர்கோவிலில் சில பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும் கிராமப்புறங்களில் பஸ்கள் இயக்கப்படாததால் மக்கள் அவதிக்கு ஆளாகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.பெரும்பாலான ஆம்னி பஸ்கள் இரவு நேரங்களில் இயக்கப்படும் நிலையில். அரசு கேட்டுக் கொண்டால் பகல் நேரங்களில் பஸ்களை இயக்கத் தயார் என்று ஆம்னி பஸ்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் போக்குவரத்து ஊழியர்கள் பணிமனை முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் பல்லவன் சாலை பணிமனையிலும் மதுரையில் பொன்மேனி பணிமனையிலும் போக்குவரத்து ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



