காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டத் தமிழ்நாட்டின் அனுமதி தேவையில்லை என்று மத்திய ஜல்சக்தித் துறை இணை அமைச்சர் ராஜ் பூஷண் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி, மேகதாது அணை குறித்து சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இதற்கு, மத்திய ஜல்சக்தித் துறை இணை அமைச்சர் ராஜ் பூஷண் சவுத்ரி எழுத்துப் பூர்வமாகப் பதிலளித்துள்ளார். அதில், காவிரி நீர் தொடர்பான பிரச்சினை குறித்து உச்ச நீதிமன்றம் கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி வழங்கிய தீர்ப்பின்படி, காவிரி ஆற்றின் குறுக்கே எந்த வகையான கட்ட மைப்பையும் அமைப்பதற்கு, கர்நாடக, தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களின் ஒப்புதலை பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த தீர்ப்பில், காவிரி நீர் தீர்ப்பாயம் 2007ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பின் 18ஆவது பிரிவு பொருத்தமானது என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது இந்த தீர்ப்பாயத்தின் எந்த உத்தரவும், எந்த மாநிலமும் தனது மாநில எல்லைக்குள் நீரை பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்கான அதன் உரிமை, அதிகாரம் அல்லது ஆற்றலை குறைக்கவோ பாதிக்கவோ கூடாது என்று தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் மேகதாது நீர்த்தேக்கம் மற்றும் குடிநீர் திட்டம் தொடர்பான விரிவான திட்ட அறிக்கை கடந்த 2019ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். அந்த திட்ட அறிக்கை, காவிரி நீர் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு இணங்கவும், தற்போது நடைமுறையில் உள்ள மத்திய நீர்வள ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படியும் திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கு மாறு கேட்டு திட்ட அதிகாரிகளிடம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
காவிரி நீர் பங்கீடு தொடர்பாக, காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆகியவை 2 வாரங்களுக்கு ஒரு முறை நிலைமையை ஆய்வு செய்து, தேவையான அளவு தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உரிய உத்தரவுகளை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.



