S. S. Sivasankar: மக்களுக்குப் பாதிப்பின்றி பஸ்கள் இயக்கம்!

Advertisements

தமிழகம் முழுவதும் மக்களுக்குப் பாதிப்பின்றி பஸ்கள் இயக்கப்பட்டுவருகிறது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-பொதுமக்கள் அரசு பஸ்களில், இடையூறின்றி பாதுகாப்பாகப் பயணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பஸ்கள் குறித்த நேரத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.

போராடுவது உங்கள் (போக்குவரத்து தொழிலாளர்கள்) உரிமை. ஆனால் மக்களுக்கு இடையூறின்றி போராட வேண்டும். பொங்கல் பண்டிகை நேரத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். தமிழகத்தில் மக்களுக்குப் பாதிப்பின்றி பஸ்கள் இயக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் 95 சதவீதத்திற்கும் மேல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அரசியல் காரணங்களுக்காகப் போராட்டங்கள் நடத்தி மக்களைத் திசை திருப்பப் பார்க்கின்றனர். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்படாத பல கோரிக்கைகள் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளன. நிதி நிலை காரணமாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாத நிலை உள்ளது. நிதிநிலை சீரான பின் அகவிலைப்படி கோரிக்கையை நிறைவேற்றுவோம். அகவிலைப்படி உயர்வை வழங்குவதற்காகக் கால அவகாசம்தான் கேட்கிறோம்.

அனைத்து தொழிலாளர்களும் கூடுதல் சம்பள உயர்வு பெற்று மகிழ்ச்சியோடு உள்ளனர். போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாடு அரசு எப்போதும் தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *