நாங்கள் அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை என்று ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம் ஒன்றில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பிராந்தியத்தையும் உலக பொருளாதாரத்தையும் உலுக்கியுள்ள இந்தப் போரைப், புதுப்பிக்கப்பட்ட ராஜதந்திர முயற்சிகள் முடிவுக்கு கொண்டுவரக்கூடும் என்று தனது நம்பிக்கையைத் தெரிவித்தார். மேலும், ஏதாவது நடப்பதற்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக தான் நினைப்பதாகத் தெரிவித்தார். தனக்கு மிகுந்த பொறுமை இருக்கிறது எனவும், என்ன நடக்கிறது என்று பார்ப்போம் எனவும் கூறினார்.
இதைத்தொடர்ந்து, ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய நிகழ்வுகள் குறித்து அமெரிக்க தரப்பிலிருந்து மத்தியஸ்தர்கள் தங்களுக்குத் தகவல்களை தெரிவிக்கலாம் என்று கூறினார். ஆனால், தற்சமயம் நாங்கள் அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம் ஒன்றில் அமெரிக்க அதிபர், புதிய முயற்சிகள் தோல்வியுற்றால், சண்டை இடைநிறுத்தப்படுவதற்கு முன் “நாம் என்ன செய்து கொண்டிருந்தோமோ அதையே மீண்டும் செய்வோம்” என்று கூறியதாகத் தெரிவித்தார். அந்த விஷயம் தொடர்பாக, போர் தொடங்கி கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு பிறகு அமெரிக்காவின் வெடிமருந்து கையிருப்பு குறைந்து வருகிறது என்ற கவலைகளை அவர் நிராகரித்தார். தங்களிடம் ஏராளமான வெடிமருந்துகள் உள்ளதாகவும், நடுத்தர ரக ஆயுதங்களும் தங்களிடம் ஏராளமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.


