குஜராத்தில் 19 வயது இளம்பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.
கடந்த நவம்பர் 14 ஆம் தேதி குஜராத் உத்வாடா ரயில் நிலையத்திற்கு அருகே செல்லும் தண்டவாளத்திற்கு அருகில் 19 வயது இளம்பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. தடயவியல் பரிசோதனையில் அந்தப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
கொலை தொடர்பாக வல்சாத் மாவட்ட காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. உத்வாடா ரெயில் நிலைய சிசிடிவிகள் ஆராயப்பட்டன. பெண்ணின் உடல் அருகே மீட்கப்பட்ட அதே மாதிரியான ஆடைகளை அணிந்த நபர் ஒருவர் கொலை நடந்ததற்குப் பின்னர் ரெயில் நிலையத்தில் அமர்ந்து உணவு சாப்பிடுவது சிசிடிவியில் பதிவாகி இருந்தது.
அந்தச் சந்தேகத்துக்கிட்டமான நபரைத் தேடுதல் குழுக்கள் அமைக்கப்பட்டன. தேடுதல் வேட்டையின் இறுதியில் கடந்த நவம்பர் 24 ஆம் தேதி குஜராத்தின் வல்சாத்தில் உள்ள வாபி ரயில் நிலையத்திலிருந்து கைது செய்யப்பட்டார். அந்த நபர் ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கை சேர்ந்த ராகுல் கரம்வீர் ஜாட் என்று கண்டறியப்பட்டது.
கொலை நடந்த அன்றைய தினம் அப்பகுதியில் தான் வேலை செய்த ஓட்டலில் தனது சம்பளத்தை வாங்குவதற்காக வந்திருந்த அவர் டியூசன் முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்த அந்த 19 வயது இளம்பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு ரெயில் நிலையத்தில் அமர்ந்து உணவு சாப்பிட்டுள்ளார். அந்தப் பெண் தனது செல்போனை பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தது தன்னைப் பார்த்துச் சிரிப்பது போல் இருந்ததாகக் கருதி அவரைக் கொலை செய்ததாக ராகுல் தெரிவித்துள்ளார்.
ராகுல் கரம்வீர் ஜாட் இந்த ஒரு கொலை மட்டுமல்லாது குறைந்தது 5 பேரைக் கொலை செய்ததைப் போலீசிடம் ஒப்புக்கொண்டுள்ளார். அவர் கைது செய்யப்படும் நவம்பர் 24 ஆம் தேதிக்கு முந்தைய தினம் தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரெயில் நிலையம் அருகே பெண் ஒருவரிடம் கொள்ளையடித்து அவரைக் கொலை செய்திருக்கிறார்.
கடந்த அக்டோபர் இறுதியில் மகாராஷ்டிராவில் சோலாப்பூர் ரெயில் நிலையம் அருகே பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். பின்னர் மேற்கு மேற்கு வங்காளம் ஹவுரா ரெயில் நிலையம் அருகே காதிஹார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பீடி கேட்டுக் குடுக்கவில்லையென முதியவர் ஒருவரை கொலை செய்துள்ளார். கர்நாடகா மாநிலம் முல்கி பகுதியில் ரெயில் பயணி ஒருவரை கொலை செய்துள்ளார்.
பெரும்பாலும் ஒரு இடத்தில் இருக்காமல் பயணித்துக் கொண்டே இருப்பதால் அவரைப் பிடிப்பதில் அந்தந்த மாநில காவல்துறையினருக்குச் சிரமம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான சமயங்களில் ரெயில் நிலைய நடைமேடைகளிலேயே அவர் இரவில் தூங்கியுள்ளார்.
சுமார் 2000 சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்த பின்னர் அவர் தற்போது போலீசில் சிக்கியுள்ளார். ரெயிலில் மாற்றுத்திறனாளி பெட்டிகளில் பயணிக்கும் பெண்களையே இவர் குறிவைத்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. திருட்டு வழக்கில் கைதுசெய்யப்பட்டு ஜோத்பூர் மத்திய சிறையில் இருந்த இவர் இந்த ஆண்டு சமீபத்தில்தான் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
ராகுல் கரம்வீர் ஜாட்-டின் தந்தை காலமான பின்னர் குற்ற செயல்களில் ஈடுபட இவரைக் குடும்பத்தினர் ஏற்க மறுத்துவிட்டதாகவும் ஐந்தாம் வகுப்பில் படிப்பை நிறுத்திவிட்டு, ராஜஸ்தான், ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசத்தில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் இவர் ஈடுபட்டுள்ளார் என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர். தற்போது இவர்மீது 13 எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.