நாடு முழுவதும் பெட்ரோல் விலையோடு போட்டி போடும் தக்காளி விலை, கேஸ் சிலிண்டர் விலையை நெருங்கும் வரை வேடிக்கை பார்க்காமல் மத்திய அரசு உடனே தலையிட்டு உணவுப்பொருள், இதர அத்தியாவசிய பொருட்களின் விலையைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தக்காளி வரத்து குறைவால் நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி இன்று ரூ.150க்கு விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம் விலையும் வெகுவாக அதிகரித்து வருகிறது.
தொடர்ந்து அத்தியாவசிய காய்கறிகளின் விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கலக்கத்தில் உள்ளனர். பொதுமக்கள் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் சின்ன வெங்காயம், பீன்ஸ், இஞ்சி, உள்ளிட்ட பல்வேறு உணவுப்பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. எப்போதும் தினசரி பெட்ரோல், டீசல், தங்கம் விலையை கவனித்து வந்த பொதுமக்கள் தற்போது தினமும் தக்காளி, வெங்காய விலையின் அசுர ஏற்றத்தை அச்சத்தோடு பார்த்து வருகின்றனர். நாட்டின் பல இடங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலையை விட ஒரு கிலோ தக்காளி அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகிறது.
அதிகரித்து வரும் தக்காளி விலையால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு, பல இடங்களில் நியாய விலைக் கடைகள் மூலம் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்துமாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “விலைவாசி உயர்வு நாடெங்கும் மக்களை அச்சுறுத்துகிறது.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பெட்ரோல் விலையோடு போட்டிப்போடும் தக்காளி விலை, கியாஸ் விலையை நெருங்கும் வரை வேடிக்கை பார்க்காமல், மத்திய அரசு உடனே தலையிட்டு உணவுப்பொருள் இதர அத்தியாவசிய பொருட்களின் விலையைக் கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.