Toll: கட்டண உயர்வு… வாகன ஓட்டிகள் அதிருப்தி!

Advertisements

20 சுங்கச்சாவடிகளுக்கான கட்டண உயர்வு வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதில் திண்டுக்கல், திருச்சி, சேலம், மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, தூத்துக்குடி உட்பட 20 சுங்க சாவடிகள் இடம்பெற்றுள்ளன…

தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தமிழகத்தில் உள்ள 20 சுங்கச்சாவடிகளில் 7 முதல் 10 சதவீத கட்டண உயர்வை அறிவித்துள்ளது. இந்தக் கட்டண உயர்வு வரும் செப்டம்பர் 1ம் தேதி நாளை மறுதினம் முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் 5 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை, கார் முதல் கனரக வாகனங்களுக்கான சுங்கச்சாவடிக் கட்டணம் உயர்கிறது.

தமிழகத்தில் ஆண்டிற்கு ஒரு முறை தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மாநிலம் முழுவதும் உள்ள 54 சுங்கச் சாவாடிகள் இரண்டு பிரிவாகக் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது. முதற்கட்டமாக 24 சுங்கச்சாவடிகளில் இந்த ஆண்டிற்கான கட்டண உயர்வு கடந்த ஏப்ரல் மாதம் அமலுக்கு வந்தது.

இந்நிலையில், மீதமுள்ள 20 சுங்கச்சாவடிகளுக்கான கட்டண உயர்வு வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதில் திண்டுக்கல், திருச்சி ,சேலம், மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, தூத்துக்குடி உட்பட 20 சுங்க சாவடிகள் இடம்பெற்றுள்ளன.

கார், வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் ஒருமுறை சென்றுவர 85 ரூபாயிலிருந்து, 90 ரூபாயாகக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இருமுறை சென்றுவர 125 ரூபாயிலிருந்து 135 ரூபாயாக அதிகரித்துள்ளது. மாதாந்திர கட்டணம் ரூபாய் 2505 லிருந்து 2740 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இலகுரக வாகனங்கள் ஒருமுறை சென்றுவர 145 ரூபாயிலிருந்து 160 ரூபாயாகவும், 2 முறை சென்றுவர 220 ரூபாயிலிருந்து 240 ரூபாயாகவும் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணம் 4385 ரூபாயிலிருந்து 4800 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதே போல் லாரி, பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு ரூ.290ல் இருந்து 320 ரூபாயாகவும், இருமுறை சென்றுவர ரூ.440ல் இருந்து ரூ.480 ரூபாயாகவும், மாதாந்திர கட்டணம் ரூ.2770 இல் இருந்து ரூ.9,595 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இப்படி தொடர்ந்து உயர்ந்து வரும் சுங்கச்சாவடி கட்டணத்தால், வாகன ஓட்டிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *