
பிகாரை தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், குஜராத், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. புதுச்சேரி, மேற்கு வங்க மாநிலங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் நாளை வெளியிடப்படுகிறது.
வாக்காளர்கள் பட்டியலில் ஏற்கனவே இடம் பெற்றிருந்தவர்கள் முதலில் தங்கள் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை தேர்தல் ஆணையத்தின் voters.eci.gov.in என்ற இணையதளம் மற்றும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில், தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்து பார்த்துக் கொள்ளலாம்.
மேலும் நீக்கப்பட்டவர்களின் விவரம் மற்றும் அதற்கான காரணங்களை அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் இணையதளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள், வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயரைச் சேர்க்க படிவம் 6-ஐ பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.

