Parliamentary Election 2024: இன்று கடைசி நாள்!

Advertisements

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தரப்பில் போட்டியிட விரும்புவோர், விருப்ப மனு பெற இன்று கடைசி நாளெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் அனைத்து கட்சி தரப்பிலும் தேர்தலுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் பரப்புரை, தேர்தல் அறிக்கை ஆகியவை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அதிமுக தரப்பில் 40 தொகுதிகலுக்கான விருப்ப மனு பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி அதாவது இன்று வரை விநியோகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தனி தொகுதியில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் ரூ. 15,000 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் பொது தொகுதியில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் ரூ. 20,000 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருப்ப மனுக்கள் அதிமுக தலைமை அலுவலகத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக அதிமுக தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள்,

தலைமைக் கழகத்தில் 21.2.2024 – 1.3.2024 வெள்ளிக் கிழமைவரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை, உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி அதற்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து மீண்டும் தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமியுடைய அறிவிப்பிற்கிணங்க, தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகத்தில் கீழே நிர்ணயிக்கப்பட்டுள்ளவாறு கட்டணத் தொகையைச் செலுத்தி விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ளலாம்” என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை சுமார் 1000 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *