Ankit Tiwari: ஜாமீன் வழங்க மறுப்பு!

Advertisements

லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் துணை சூப்பிரண்டு டாக்டர் சுரேஷ்பாபு. இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2018-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு அமலாக்கத்துறையிடம் விசாரணைக்கு வந்து இருப்பதாகவும், வழக்கில் இருந்து விடுவிக்க மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ரூ.51 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

அதில் ரூ.20 லட்சத்தை கடந்த மாதம் வாங்கிய நிலையில், 1-ந்தேதி மேலும் ரூ.20 லட்சத்தை வாங்குவதற்கு அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி திண்டுக்கல்லுக்கு வந்தார். திண்டுக்கல் தோமையார்புரம் பகுதியில் அரசு டாக்டரிடம், ரூ.20 லட்சத்தை வாங்கி கொண்டு அதிகாரி அங்கித் திவாரி காரில் தப்பியபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து திண்டுக்கல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு தூங்க முடியாமல் தவித்த அவர், பின்னர் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையில் மதுரை சிறையில் இருக்கும் அங்கித் திவாரிக்கு ஜாமீன் கேட்டு அவருடைய தரப்பில், திண்டுக்கல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க நீதிபதி மறுப்பு தெரிவித்தார். மேலும் வழக்கு ஆரம்பகட்ட நிலையில் உள்ளதால் ஜாமீன் வழங்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *