Our Lady of Lourdes Shrine Villianur: வில்லியனூர் மாதா ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

புதுச்சேரியில் வரலாற்று சிறப்புமிக்க வில்லியனூர் மாதா ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி வில்லியனூரில் அமைந்துள்ள தூய லூர்து அன்னை திருத்தலம் வரலாற்று சிறப்பு மிக்கதாகும். பிரான்ஸ் நாட்டின் லூர்து நகருக்கு அடுத்து உலகிலேயே லூர்து மாதாவிற்கெனக் கட்டப்பட்ட 2-வது ஆலயம் வில்லியனூர் மாதா ஆலயமாகும். இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகை முடிவடைந்த வாரத்தில் சனிக்கிழமை அன்று ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம்.

அதன்படி வில்லியனூர் தூய லூர்தன்னை திருத்தலத்தின் 147 வது ஆண்டுப் பெருவிழா இன்று கொடியேற்றதுடன் துவங்கியது. காலை 5.30 மணிக்கு அருள்நிறை ஆலயத்தில் நடைபெற்ற கூட்டு திருப்பலிக்கு பின்னர், மாதா உருவம் தாங்கிய திருக்கொடியானது பக்தர்கள் புடைசூழ மாதா திருக்குளத்தை சுற்றி பவனியாகக் கொண்டு செல்லப்பட்டது. அதன் பின்னர், திருத்தல முற்றத்தில் உள்ள கொடிமரத்தில் புதுச்சேரி – கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் திருக்கொடியேற்றி திருவிழாவைத் துவக்கி வைத்தார். இதில் முதன்மைகுரு பேரருட்திரு குழந்தைசாமி, புதுவை மறைவட்ட குருக்கள் அருட்பணி ரொசாரியோ, தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா அதிபர் அருட்பணி. பிச்சைமுத்து உட்பட புதுச்சேரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 13ம் தேதிவரை திருவிழா நவநாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் திருப்பலிகள், தேர்பவனி நடைபெறுகிறது. ஏப்ரல் 14ம் தேதி திருத்தலத்தின் 147வது ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு திருப்பலி, அதனைத் தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு மாதாவுக்கு வைரகிரீடம் சூட்டப்பட்டு, பெருவிழா ஆடம்பர தேர் பவனி நடைபெறவிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *