
தமிழகத்தில் ஜூன் 10-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
சென்னை:தமிழகத்தில் கடந்த ஏப்ரல் கடைசியில் பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து வருகிற 6-ந்தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருந்தது.
இந்த நிலையில், கத்திரி வெயில் முடிவடைந்தாலும், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையவில்லை. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெப்பம் 100 டிகிரி செல்சியசை தாண்டிப் பதிவாகி வருகிறது. இதன் காரணமாகப் பகல் நேரங்களில் மக்களால் வெளியே நடமாட முடியாத நிலை உள்ளது.
இந்தச் சூழலில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதியில் பள்ளிகளைத் திறந்தால் வெயிலின் தாக்கத்தால் மாணவர்கள் கடுமையான பாதிப்புகளைச் சந்திப்பார்கள் என்பதால், பள்ளிகள் திறப்பு தேதியைத் தள்ளிவைக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், விடுமுறையை நீட்டித்து ஜூன் 10-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஏற்கெனவே வெப்பம் காரணமாகப் புதுவையில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

