நடிகர் ரவி மோகனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘கராத்தே பாபு’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
‘ஜெயம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரவி மோகன், ‘எம். குமரன் மகாலட்சுமி’, ‘உனக்கும் எனக்கும்’, ‘சந்தோஷ் சுப்ரமணியம்’, ‘பேராண்மை’, ‘தனி ஒருவன்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். தற்போது ரவி மோகன் பல்வேறு ஜானர்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். பேன்டஸி கதைக்களத்தில் ‘ஜீனி’, அரசியல் பின்னணியில் ‘கராத்தே பாபு’, ‘மிருதன் 2’ மற்றும் நகைச்சுவை கலந்த ‘ப்ரோ கோட்’ உள்ளிட்ட திரைப்படங்கள் அவரது அடுத்தடுத்த படங்களாக உள்ளன.
ரவி மோகனின் 34-வது திரைப்படமான ‘கராத்தே பாபு’வை ‘டாடா’ படத்தின் இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்கியுள்ளார். ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். அரசியல் கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் ரவி மோகன் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ரவி மோகனின் கதாபாத்திரமும் கவனம் பெற்றுள்ளது.
இப்படத்தின் மூலம் டாவ்டி ஜிவால் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும், இயக்குநர் பி.வாசுவின் மகன் சக்தி வாசுதேவனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நாசர், கே.எஸ்.ரவிக்குமார், காளி வெங்கட், பிரதீப் ஆண்டனி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘கராத்தே பாபு’ படத்தின் ‘ராசாதி ராசா’ பாடலையும் படக்குழு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலை பாடகி மீனாட்சி இளையராஜா எழுதி பாடியுள்ளார்.
இந்த நிலையில், ரவி மோகனின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ள சிறப்பு போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

