
அரசியல் புரிதலற்ற இளைஞர்களைக் கொண்ட நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
திமுகவிலிருந்து வெளியேறியதும், விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் வேல்முருகன் இணைவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அதை முற்றிலும் மறுத்த வேல்முருகன், விஜய் மற்றும் அவரது கட்சியை கடுமையாக விமர்சித்து உள்ளார். விஜய் அரசியலுக்கு வந்தபோது முதலில் வரவேற்றவர்களில் தானும் ஒருவர் என்றாலும், தற்போது அந்தக் கட்சியை அரசியல் புரிதல் இல்லாத இளைஞர்கள் கொண்ட அமைப்பு என அவர் குற்றம் சாட்டினார். மேலும், தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாறு மற்றும் திராவிட மரபு குறித்து எந்த தெளிவும் தவெக கட்சிக்கு இல்லை என்றும் குற்றம் சாட்டினார்.
அதனால், 2026 தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி அமைப்பதற்கு “வாய்ப்பே இல்லை” என்று அவர் தெளிவாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய வேல்முருகன், தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட விஷயங்களில் திமுக பெரியண்ணன் போக்குடன் செயல்படுகிறது என வேல்முருகன் விமர்சித்து உள்ளார். மேலும், நெய்வேலி நிலக்கரி சுரங்கம் பரந்தூர் விமான நிலையம் தொடர்பான எதிர்ப்பு, வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு போன்ற முக்கியமான பிரச்சினைகளில் தனது கட்சியின் கோரிக்கைகள் புறக்கணிக்கப் பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.




