
திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலரைத் தகாத வார்த்தையில் பேசிய காவல் ஆய்வாளர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சேடன் குட்டை பகுதியில் நகர்ப்புற சுகாதார நிலையம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகின்றது.ஆனால் அங்குப் போதுமான இட வசதி இல்லையெனக் கூறி பாரதிதாசன் நகரில் நகர்ப்புற சுகாதார நிலையம் அமைப்பதற்கான பணிகளில் துறை சார்ந்த அதிகாரிகள் ஈடுபட்டதாகத் தெரிய வருகின்றது.
இன்னிலையில் இன்று திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையாளர் தமிழ்ச்செல்வியைபாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெயராஜ் மற்றும் பாமக நகர மன்ற உறுப்பினர்கள் ஹேமமாலினி, மணிகண்டன், உட்பட 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நகராட்சி ஆணையாளர் தமிழ்ச்செல்வியை முற்றுகையிட்டு கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த திண்டிவனம் நகர காவல் ஆய்வாளர் கலைச்செல்வி அங்கு இருந்த கிராம நிர்வாக அலுவலர் ராம்குமாரை ஒருமையிலும் அவமரியாதையாகப் பேசியதாகக் கூறப்படுகின்றது.
இதனைக் கண்டித்து திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 50-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் காவல் ஆய்வாளர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தித் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் காவல் ஆய்வாளர்மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகத் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

