ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு கொண்டாடிய ஹெத்தையம்மன் திருவிழா!

Advertisements

குன்னூர்:

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஜெகதளாவை தலைமையிடமாகக் கொண்ட ஆரூர் கிராமங்களில் வசிக்கும் படுகர் இன மக்கள் ஹெத்தையம்மன் பண்டிகையை ஆண்டுதோறும் ஜனவரி மாதம் கொண்டாடுகின்றனர்.

ஜெகதளா, காரக்கொரை, ஓதனட்டி, பேரட்டி, மல்லிகொரை, மஞ்சுதளா, சின்னப் பிக்கட்டி, பெரிய பிக்கட்டி ஆகிய 8 கிராம மக்கள் பண்டிகையைக் கொண்டாடினர்.

இதையொட்டி பக்தர்கள் 48 நாட்கள் விரதம் இருந்து, ஜெகதளா ஹெத்தையம்மன் கோவிலிலிருந்து தும்மனாடா, பேரகல் வழியாகக் கொதுமுடி கோவிலுக்குப் பாரம்பரிய குடை மற்றும் செங்கோலுடன் நடந்து சென்றனர்.

கோவிலுக்குச் சென்றதும், அருள்வாக்கு கூறினர். தொடர்ந்து, சுத்தகல் கோவிலில் நடந்த பூஜையில் பங்கேற்று, கிராம மக்களுக்கு ஆசி வழங்கினர். தொடர்ந்து பக்தர்கள் காரக்கொரை மடிமனைக்கு வந்தனர்.

நேற்று ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி காரக்கொரை மடிமனையில் குண்டம் திருவிழா நடைபெற்றது.

சிறப்புப் பூஜை நடத்தி, கோவில் பூசாரி முதலில் குண்டம் இறங்கினார். பின்னர் கும்பம் எடுத்து வந்த பூசாரி உள்பட பக்தர்கள் 11 பேரும் குண்டம் இறங்கினர்.

தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள் மற்றும் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான படுகர் இன மக்கள் கலந்துகொண்டனர்.

விழாவை முன்னிட்டு அனைவருக்கும் பாரம்பரிய உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நாளைப் பந்துமி கிராமத்தில் ஹெத்தை அம்மன் கோவில் விழா நடக்கிறது.

தொடர்ந்து வருகிற 20-ந் தேதி(திங்கட்கிழமை) குன்னூர் அருகே உள்ள ஜெகதளா கிராமத்தில் ஆரூர் கிராம மக்கள் சார்பில் மாபெரும் ஹெத்தை பண்டிகை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *