Thiruvallur train accident:18 ரெயில்கள் ரத்து..பயணிகள் அவதி!

Advertisements

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் ஏற்பட்ட ரெயில் விபத்து காரணமாக 18 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

திருவள்ளூர்:மைசூரிலிருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு பாக்மதி விரைவு ரெயில் சென்றுகொண்டிருந்தது. திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே ரெயில் வந்துகொண்டிருந்தபோது, அங்கு ஏற்கெனவே நின்றுகொண்டிருந்த சரக்கு ரெயிலின் பின்னால் வேகமாக வந்து மோதி விபத்து ஏற்பட்டது. ரெயில்கள் மோதிக்கொண்ட வேகத்தில் சில பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. மணிக்கு 109 கி.மீ. வேகத்தில் சென்ற ரெயில், விபத்து நடந்த இடத்தில் 90 கி.மீ. வேகத்தில் சென்றுள்ளது. ஒடிசா ரெயில் விபத்துபோல், சிக்னல் கோளாறு காரணமாகக் கவரப்பேட்டையில் ரெயில் விபத்து நேர்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த விபத்தில், இரண்டு ரெயில்களின் பெட்டிகளும் தடம்புரண்டு மற்ற தண்டவாளங்களை ஆக்கிரமித்துள்ளன. இதனால், தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கவரைப்பேட்டையில் ஏற்பட்ட ரெயில் விபத்து காரணமாக 18 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரலிலிருந்து திருப்பதி செல்லும் அனைத்து ரெயில்களும் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், அரக்கோணத்திலிருந்து புதுச்சேரி செல்லும் எம்இஎம்யூ ரெயில் இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சூளூர்பேட்லை நெல்லூர் வழித்தடத்தில் இயக்கப்படும் எம்இஎம்யூ ரெயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. விஜயவாடா- சென்ட்ரல் வழித்தடத்தில் இருமார்க்கத்திலும் பினாகினி எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *