
மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மலைப்பகுதியில் கனமழை பெய்து வெள்ளம் மண்சரிவு ஏற்பட்டதில் குழந்தைகள் உட்படக் குறைந்தது 20 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு வங்கத்தின் வடக்கில் இமயமலைப் பகுதியான டார்ஜிலிங்கில் சனிக்கிழமை இரவு முதல் விடியவிடிய இடைவிடாமல் கனமழை பெய்தது. 12 மணி நேரத்தில் 30 செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இதனால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுக் கரையை உடைத்துக்கொண்டு ஊருக்குள் புகுந்தது. ஆற்றின் கரையை ஒட்டிய பகுதிகளில் வீடுகள், கட்டடங்கள், சாலைகள், பாலங்கள் ஆகியவற்றையும் உடைத்துக்கொண்டு வெள்ளம் பாய்ந்தது.
கனமழையால் மலையில் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுச் சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்சரிவு ஆகியவற்றில் சிக்கியும், இடிபாடுகளில் சிக்கியும் குழந்தைகள் உட்படக் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.
நிலச்சரிவில் சிக்கி மிரிக்கில் 11 பேரும், டார்ஜிலிங்கில் 7 பேரும் உயிரிழந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கானோர் சிக்கித் தவிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளூர் நிர்வாகத்துடன் காவல்துறையினர், தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கியவர்களை ரப்பர் படகுகள் கொண்டும், வடங்களைக் கட்டியும் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் மீட்டனர்.
கனமழை வெள்ளம் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம் தொலைத்தொடர்பு போக்குவரத்து வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன.



