கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதுதொடர்பான வழக்கில் மதுரை உயர் நீதிமன்ற தனி நீதிபதி கடந்த ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கினார். இந்த உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வும் பின்னர் உறுதி செய்தது.
இதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு, நவம்பர் 20ஆம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டதுடன், கார்த்திகை தீபத் திருநாளான நவம்பர் 24ஆம் தேதி மட்டும் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டது.
மேலும், கோவில் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மட்டுமே தீபம் ஏற்றச் செல்ல வேண்டும் என்றும், பொதுமக்கள் செல்லக்கூடாது என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி தமிழக அரசு தற்போது சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் டி. விஜய் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், தீபத்தூணில் தீபம் ஏற்றுவது அத்தியாவசியமான சமய நடைமுறையா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் இறுதி முடிவு எடுக்கவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 1959ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின்படி, உச்சிப்பிள்ளையார் கோவிலில் விளக்கு ஏற்றுவதே பாரம்பரிய நடைமுறையாக இருப்பதாகவும், வேறு இடத்தில் தீபம் ஏற்ற அனுமதிப்பது வழக்கத்திற்கு முரணானது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சர்ச்சைக்குரிய இடத்தில் தீபம் ஏற்ற அனுமதிப்பது திருப்பரங்குன்றத்தில் மட்டுமின்றி, தமிழகத்தின் பிற பகுதிகளிலும் மத நல்லிணக்கத்தைப் பாதிக்கக்கூடும் என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இறுதி தீர்ப்பு வெளியாகும் வரை தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது என்றும், நவம்பர் 20ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழக அரசின் சீராய்வு மனுவை விசாரித்த முந்தைய அமர்வில் இடம்பெற்ற நீதிபதிகள் இருவரும் இன்று வெவ்வேறு அமர்வுகளில் வழக்குகளை விசாரிக்க உள்ளனர். மேலும், நாளை குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், தமிழக அரசின் அவசர சீராய்வு மனு இன்று விசாரணைக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை, நீதிபதி பிரசாந்த் குமார் முன்னிலையில் தமிழக அரசு தரப்பு ஆஜராகி அவசர விசாரணை கோரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தக் கோரிக்கையை ஏற்று சிறப்பு அமர்வு அமைக்கப்படுமா? தமிழக அரசின் சீராய்வு மனு இன்று விசாரிக்கப்படுமா? என்பது தொடர்பான அடுத்தகட்ட நகர்வுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.


