
சமீபத்தில், பீகாரில் ஆயுஷ் மருத்துவர் பட்டமளிப்பு விழா நடந்தது. அதில் பீகாரின் முதலமைச்சர் நிதிஷ் குமார் கலந்துகொண்டு பட்டமளித்தார்.அந்த விழாவில் டாக்டர். நுஷ்ரத் பர்வீன் என்பவர் ஹிஜாப் அணிந்து பட்டம் பெற வந்தார். அவரை ஹிஜாப்பை நீக்குமாறு கூறிகொண்டே, அவரது ஹிஜாப்பை இழுத்துவிட நிதிஷ் குமார் முயற்சி செய்தார்.அப்போது மேடையில் இருந்த துணை முதல்வர் சாம்ராஜ் சவுத்ரி, நிதிஷ் குமாரின் செயலை தடுக்க முயன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
நிதிஷ் குமாரின் இந்தச் செயலுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. நிதிஷ் குமாரின் இந்தச் செயல் குறித்து காங்கிரஸ் கட்சி கூறியதாவது, “பீகாரின் உயர்ந்த பதவியில் இருக்கும் ஒருவர் வெளிப்படையாகவே இந்த மாதிரியான கீழ்தரமான செயலில் ஈடுபடுகிறார். அப்படியென்றால், அந்த மாநிலத்தில் பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருப்பார்கள் என்று யோசியுங்கள். நிதிஷ்குமார் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவரின், கீழ்தரமான செயலை மன்னிக்க முடியாது” என்று எக்ஸ் பக்கத்தில் கண்டனங்களை தெரிவித்துள்ளது.
ராஷ்டிரியா ஜனதா தளம் தனது எக்ஸ் பக்கத்தில், “நிதிஷ் ஜிக்கு என்ன ஆனது? அவரது மனநலம் முழுமையாக பாதிக்கப்பட்டு பரிதாபகரமாக ஆகிவிட்டது அல்லது நிதிஷ் பாபு 100 சதவிகிதம் சங்கி ஆகிவிட்டார்” என்று பதிவிட்டுள்ளது.
நிதிஷ்குமாரின் செயலுக்கு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லாவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘நிதிஷ்குமார் பொதுவெளியில் ஒரு முஸ்லிம் பெண்ணை அவமானப்படுத்தியுள்ளார். அந்த பெண்ணுக்கு சான்றிதழ் கொடுக்க விரும்பவில்லையென்றால், அவரை தவிர்த்திருக்கலாம். அதை விடுத்து விட்டு, ஹிஜாப்பை இழுப்பது அவமானப்படுத்தும் செயல். சில ஆண்டுகளுக்கு முன்பு நிதிஷ்குமார், ஜனநாயகவாதியாகவும் அறிவாளியான அரசியல்வாதியும் கருதப்பட்டார். தற்போது, அதில் இருந்து அவர் விலகி செல்ல தொடங்கியுள்ளார். இப்போது, அவரின் முகத்திரை கிழிந்து உண்மையான முகம் வெளிப்பட்டுள்ளது. இது, அனைத்துமே துரதிஷ்டசமானது என்று கண்டித்துள்ளார்.
காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முக்தி, ‘நிதிஷ்குமார் உடனடியாக பதவி விலக வேண்டும். நிதிஷ்குமார் தனிப்பபட்ட முறையில் பெண்மைக்கு இழுக்கு செய்துள்ளார். மத உரிமையை பறிக்கும் வகையில் செயல்பட்டுள்ளார்’ என்று குற்றம் சாட்டியுள்ளார். காஷ்மீரை சேர்ந்த பல அரசியல் கட்சிகள் நிதிஷ்குமார் அராஜகமாக செயல்பட்டுள்ளார். அவரின், செயல் வெட்கக்கேடானது என்று விமர்சித்துள்ளன.
நிதிஷ்குமாரின் செயலால் டாக்டர். நுஷ்ரத் பர்வீன் மனதளவில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளார் என்று அவரின் சகோதரர் தெரிவித்துள்ளார். கொல்கத்தா சட்ட கல்லூரியில் பேராசிரியராக பணி புரியும் நுஷ்ரத் பர்வீனின் சகோதரர் கூறுகையில்,’ டிசம்பர் 20ம் தேதி எனது சகோதரி பணியில் சேர வேண்டும். ஆனால், முதல்வரின் செயலால் அவர் மிகுந்த மனவேதனையடைந்துள்ளார். இந்த வேலையே வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்துள்ளார். இன்னொருவர் செய்த தவறுக்கு உனக்கு ஏன் தண்டனை கொடுத்துக் கொள்கிறாய் என்று நாங்கள் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளாம்’ என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் நடந்து ஒரு நாள் ஆகியும் நிதிஷ் குமார் அல்லது அவரின் கட்சியில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. பீகார் மாநில போலீஸ் அதிகாரிகளும் இது தொடர்பாக எந்த விளக்கமும் அளிக்க முன்வரவில்லை.
இதற்கிடையே , பாகிஸ்தானில் இருந்தும் நிதிஷ்குமாருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த நிழல்உலக தாதாக்களுடன் தொடர்புடைய ஷாகித் பாத்தி என்பவர் வெளியிட்டுள்ள வீடியோவில், நிதிஷ்குமார் முஸ்லிம் பெண்ணை அனைவர் முன்னிலையிலும் அவமானப்படுத்தியுள்ளார். இந்த செயலுக்காக அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால், அதற்கான விலையை கொடுக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார். இந்த வீடியோவும் பீகார் மாநிலத்தில் பரவி வருகிறது. பீகாரில் 17 சதவிகிதம் இஸ்லாமிய மக்கள் வசிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொதுவெளியில் நிதிஷ்குமார் சர்ச்சையில் சிக்குவது இது முதன்முறையல்ல. கடந்த மார்ச் மாதத்தில் பாட்னாவிலுள்ள பாடலிபுத்திரா விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு போட்டிகளின் தொடக்க விழா நடந்தது. மரபுபடி துவக்க விழாவில் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அனைவரும் எழுந்து நின்று தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தினர்.
அப்போது, முதல்வர் நிதி்ஷ்குமார், தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தாமல், தன் அருகே நின்றிருந்த ஐ.ஏ.எஸ்.அதிகாரியும், முதல்வரின் முதன்மை செயலருமான தீபக் குமாரிடம் சிரித்து பேசியும், அவரது தோளில் கை வைத்து குறும்புத்தனம் செய்து கொண்டிருந்தார். தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தி கொண்டிருந்த அந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி முதல்வரின் செயலால் தர்ம சங்கடத்திற்கு ஆளானார். மாநில முதல்வர் தேசிய கீதத்தை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்டதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. அப்போதும், ஜே.ஆர்.டி கட்சி, முதல்வர் நிதிஷ்குமார் நல்ல மன நிலையில்தான் உள்ளாரா? என்று மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


