விஜய்க்கு திருமுருகன் காந்தி ஆதரவு குரல்!

Advertisements

சென்னை:

தவெக தலைவர் விஜய் பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிராகப் போராடும் மக்களைச் சந்திப்பதற்காகச் சென்றுள்ளார். இதற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் சர்ச்சையாகியுள்ளன.

இதுகுறித்து திருமுருகன் காந்தி பரந்தூர் என்பது இந்தியாவுக்கு வெளியே உள்ளதா அடையாள அட்டையைக் கேட்கும் காவலர் தனது பணி நியமன அல்லது அடையாள அட்டையைக் காட்டச் சொன்னால் காவல்துறை செய்யுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து மே 17 இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அடையாள அட்டையை எதற்குக் காவல்துறைக்கு காட்ட வேண்டும். இது அப்பட்டமான அயோக்கியத்தனமான மனித உரிமை மீறல்.

இந்த நாட்டின் எந்தப்பகுதிக்கும், யாரும் செல்வதற்கு எவ்வுத அனுமதியும் பெற வேண்டியதில்லை என்பது இந்திய அரசியல் சாசனத்தால் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை.

அடையாள அட்டையைக் கேட்கும் காவலர் தனது பணி நியமன அல்லது அடையாள அட்டையைக் காட்டச் சொன்னால் காவல்துறை செய்யுமா. ஒரு ஐபிஎஸ் ஆபிசர் உண்மையிலேயே தேர்வெழுதி வென்றாரா, பணி நியமன ஆணை பெற்றாரா எனச் சாமானியர் கேட்டால் கொடுக்க இயலுமா. யார் உயர்ந்த குடிமகன்-யார் இரண்டாம் தரக் குடிமகன் எனத் தரம் பிரிக்கப்பட்டுள்ளதா.

யாருடைய குடியுரிமையை யார் சோதனை செய்வது. பரந்தூர் என்பது இந்தியாவுக்கு வெளியே உள்ளதா அல்லது ராணுவ தாக்குதல் நடத்தப்படும் பகுதியா. என்ன காரணத்திற்காக இந்த அடக்குமுறைகள்.

இது எந்த வகை ஜனநாயகம். தமிழ்நாட்டின் குடிமக்களைச் சந்திக்க யாரிடம் அனுமதி வாங்க வேண்டும். மக்களைச் சந்திப்பதை தடுத்து நிறுத்தக் காவல்துறைக்கு எந்தச் சட்டப்பிரிவின் கீழ் அதிகாரம் கிடைக்கிறது.

தமிழ்நாட்டு மீனவரைக் கொலை செய்த இலங்கை கடற்படை மீது கொலை வழக்கைப் பதிவு செய்ய இயலாமல் நடுங்கும் தமிழக காவல்துறை, சொந்த மக்கள்மீது அடக்குமுறையை ஏவுகிறது.

இங்கிலாந்து நாட்டின் ஸ்டெர்லைட் முதலாளிகளுக்காகச் சொந்த மக்களைச் சுட்டுப்படுகொலை செய்கிறது. வெளிநாட்டுக்காக வேலை செய்வதற்கு எதற்குத் தமிழக காவல்துறை.

மக்கள் போராட்டங்களைச் சட்ட ஒழுங்கு பிரச்னையாக மாற்றுவது என்பது பெரியார் போராட்டங்களைச் சட்ட ஒழுங்கு பிரச்னையாக மாற்றி அவரைக் கைது செய்த காங்கிரஸ் அரசின் அடக்குமுறைக்கு நிகரானது. மக்கள் தமக்கான கோரிக்கைகளை எடுத்துச் சொல்ல அண்ணலின் சட்டத்தில் முழு உரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது.

அரசியல் சாசனம் உறுதி செய்திருக்கும் உரிமைகளைப் பாதுகாப்பதுதான் காவல்துறை, நீதித்துறை மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கடமை.

இதை மீறுபவர் யாராகினும் அரசியல் சாசனத்தின் படி தேசவிரோதிகளே. போராடும் பரந்தூர் குடிமக்களின் மீதான ஒடுக்குமுறை மிக மிக மோசமானது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

திமுக அரசு மக்களின் அடிப்படை மனித உரிமைகள்மீது கைவைக்கும் காவல்துறையை தடுக்காமல் வேடிக்கை பார்க்குமெனில் அது மக்கள் விரோத அரசாகத்தான் பார்க்கப்படும்.

ஜெயலலிதா ஆட்சியில் நடந்த கூடன்குள போராட்டத்தில் ஈடுபட்ட மக்களைச் சந்திக்க எவ்வித தடைகளும் இல்லாமல் இருந்தது. ஒடுக்குமுறை ஏவப்பட்ட காலத்தில் கூட மக்களைச் சென்று சந்தித்துள்ளோம்.

அதேபோல நியூட்ரினோ எதிர்ப்பு போராட்டத்திற்காக மக்கள் சந்திப்புப் பயணத்தை நடத்திய வைகோவின் நடைபயணத்தையோ, கூட்டங்களையோ ஜெயலலிதா அரசுத் தடை செய்யவில்லை.

முல்லைப்பெரியாறு, பாலச்சந்திரன் படுகொலைக்கு எதிராக எழுந்த போராட்டம் என எவற்றின் மீதும் மக்களைச் சந்திக்க அனுமதி மறுப்பு’ எனும் அடக்குமுறை ஏவப்பட்டதில்லை.

அடக்கி ஒடுக்கப்படும் மக்களே ஆட்சியாளர்களைப் பதவியிலிருந்து அப்புறப்படுத்துகிறார்கள். திமுகவின் அரசு மக்களின் மீதான அடக்குமுறைமூலம் மக்களின் ஆதரவை வென்றுவிட இயலாது.

புதுகோட்டையில் சூழலியல் செயற்பாட்டாளர் ஜகுபர் சாதிக் பச்சைப்படுகொலை. மாநிலமெங்கும் சாதியப்படுகொலைகள், சாராயச் சாவுகள், பாலியல் கொலைகள் என நடக்கும் குற்றங்களைத் தடுக்க விருப்பம் இல்லாமல் கைகட்டி வேடிக்கை பார்க்கும் காவல்துறை போராடும் மக்களை ஒடுக்குகிறது.

இனாம் விவசாயிகள் கோரிக்கை போராட்டம், ஒப்பந்த ஊழியர் போராட்டம், சம்பை ஊற்று சூழலியல் போராட்டம், மருதுபாண்டியர் பொதுக்கூட்டம், பொங்கல் விழா, முப்பெரும் விழா என அனைத்திற்கும் சட்டஒழுங்கு எனத் தடைவிதிக்கிறார்கள்.

அதேநேரத்தில் ஒடுக்குமுறை செய்யும் தமிழக காவல்துறை சாதியவாதிகள், கனிமகொள்ளையர்கள், மதவெறியர்களை பாதுகாக்கிறது. இதைத் திமுக அரசோ, அதன் அமைச்சர் பெருமக்களோ பொருட்படுத்துவதில்லை.

முதல்வரின் கீழ் இயங்குவதாகச் சொல்லப்படும் காவல்துறை மக்களின் அடிப்படை உரிமைகளைக் காலில்போட்டு நசுக்குகிறது.

பரந்தூர் விமான நிலையம் கட்டப்பட்டால் மோடி அரசால் அது அதானி வசம் ஒப்படைக்கப்படப் போகிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. ஒன்றிய மோடி அரசின் நண்பன் சொந்தம் கொண்டாடப் போகும் திட்டத்திற்கு எதற்காகத் தமிழன் தன் நிலத்தை இழக்க வேண்டும்.

சமூக செயற்பாட்டாளர்கள் மனித உரிமைகளைப் பாதுகாக்க ஒன்றுபட வேண்டும். என்று கூறியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *