விஜய் மேடையை ‘தவிர்த்த’ திருமாவளவன் விளக்கம்!

‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவில் விஜய்யுடன் பங்கேற்காதது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தவெக தலைவர் விஜய்யின் மாநாட்டு உரைக்கு முன்பு, நூல் வெளியீட்டு விழாவுக்கு அவர் வருவதை அறிந்தபோதும்கூட, அந்த நிகழ்வில் நான் பங்கேற்பதை பதிப்பகத்தாரிடம் உறுதி செய்துவிட்டேன். இந்த நிலையில், அவரது மாநாட்டு உரைக்குப் பிறகு, தொலைநோக்கு பார்வையுடன் முடிவெடுக்கும் அரசியல் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கு விசிக ஆளானது. ‘விஜய்யை கொண்டே விழா நடத்தட்டும்’ என்று மிக மிகத் தொடக்க நிலையிலேயே அவர்களிடம் கூறிவிட்டேன்.

இந்த நிலையில், ‘விஜய்யோடு மேடையேறும் துணிச்சல் திருமாவளவனுக்கு இல்லையா. திமுகவின் அச்சுறுத்தலுக்குப் பணிந்துவிட்டாரா’ என்று கேட்பவர்கள், ‘ஏன் ஏற்கெனவே இசைவு அளித்த திருமாவளவனை விட்டுவிட்டு நிகழ்ச்சியை நடத்த முடிவெடுத்தனர்’ என்று கேட்கவில்லை. விஜய்யை மிகப் பெரிய சக்தியாகவும், நம்மை ஒரு ‘துக்கடா’வாகவும் எடைபோடுபவர்கள் எவ்வாறு நமக்காக வாதிடுவார்கள். ‘தான் பங்கேற்காவிட்டாலும் பரவாயில்லை; விஜய் பங்கேற்கட்டும்’ எனத் திருமாவளவன் பெருந்தன்மையோடு ஒதுங்கியுள்ளார் என்று பேச இங்கே யார் உண்டு.

‘ஆதவ் அர்ஜுனாவின் கட்டுப்பாட்டில் சிக்கியிருக்கிறார் திருமா. அதனால்தான் அவர்மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்’ என்று கூறும் அதே நபர்கள்தான், ‘திமுகவுக்கு அஞ்சுகிறார். அதனால்தான் இந்த நிகழ்வில் பங்கேற்காமல் தவிர்த்துவிட்டார்’ என்றும் முன்னுக்கு பின் முரணாகப் பேசுகின்றனர்.

ஆதவ் அர்ஜுனாவின் கட்டுப்பாட்டில் இருப்பது உண்மை என்றால், அவர் அழைத்தும்கூட ஏன் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை? அதேபோல, திமுக அச்சுறுத்துவது உண்மையாக இருந்தால், அதற்குப் பணிந்து ஆதவ் அர்ஜுனா மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை? இப்படி கேள்வி எழுவது இயல்பு. ஆனால், அப்படியெல்லாம் யாரும் சிந்திக்கமாட்டார்கள். கூட்டணியிலிருந்து நான் வெளியே வருவேன் என்ற எண்ணம் நிறைவேறாததால், வாய்க்கு வந்தபடி அவதூறுகளை அள்ளி வீசுகின்றனர். அதற்குச் செவிமடுக்க வேண்டாம். வழக்கம்போலக் கடந்து செல்வோம்” திருமாவளவன் கூறியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *