
திருபுவனையில் மோட்டார் சைக்கிள் திருடனை சினிமா பாணியில் 3 கிலோமீட்டர் துரத்திச் சென்று போலீசார் பிடித்தனர் . மேலும் குற்றவாளியைக் கைது செய்து 3 மோட்டார் சைக்கிள்களைப் பறிமுதல் செய்தனர்.
திருபுவனைப் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாகப் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் நடைபெற்று வந்தது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் திருபுவனை காவல் நிலையத்தில் புகார் அளித்து வந்த நிலையில், புதுச்சேரி மேற்கு பிரிவு எஸ்.பி. வம்சிதரெட்டி உத்தரவின் பேரில் திருபுவனை சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ, குற்றவியல் போலீசார் அசோகன், சத்தியமூர்த்தி மற்றும் போலீசார் மதகடிப்பட்டு மாநில எல்லையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பிக்க முயன்றார்.
அப்போது போலீசார் தடுத்தும் நிற்காமல் சென்ற அவரைச் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் 3 கிலோ மீட்டர் தூரம் சினிமா பாணியில் விரட்டிச் சென்று குச்சிபாளையம்- திருக்கனூர் சாலையில் உள்ள வளைவில் மடக்கி பிடித்தார்கள். அவரை அழைத்து வந்து திருபுவனை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் விழுப்புரம் மாவட்டம்கீழ் பெரும்பாக்கம் நாராயண நகரை சேர்ந்த கோபால் என்பவரின் மகன் வெங்கடேசன் 47, ரியல் எஸ்டேட் தொழில் செய்து கொண்டு மோட்டார் சைக்கிளைத் திருடி விற்பதை வாடிக்கையா கொண்டுள்ளார். அவரிடமிருந்து 3 மோட்டார் சைக்கிள்களைத் திருபுவனை போலீசார் விழுப்புரம் பகுதியில் பல்வேறு இடங்களில் கைப்பற்றினார்கள். அதைத் தொடர்ந்து வெங்கடேசன் மீது வழக்குப் பதிவு செய்து குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தார்கள்.

