Thilagabama:நீங்களா பார்த்துத் திருந்தலனா! மக்களால் திருத்தப்படுவீர்கள்!திமுகவை விளாசும் திலகபாமா!

Advertisements

நாடளுமன்றத் தேர்தல் வந்தது உடனே மக்களுக்குத் துணையாக நிற்கும் கட்சிபோல நரி வேடம் அணிந்து வெற்றி பெற்றவுடன் தற்போது மீண்டும் அதே பழைய கதையான தொழிற்பேட்டை அமைப்பதில் வந்து நிற்கிறது தந்திரமான அரசு எனத் திலகபாமா கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாகப் பாமக மாநில பொருளாளர் திலகபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில்: மக்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்கிறேன் என்று கூறி மக்களின் கையைப் பிடித்து முன்னே நடக்க வைத்து விட்டுச் சம்பட்டி கொண்டு இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்தை பின்னே அடித்து நொறுக்குறது தமிழக அரசு. விவசாயிகளுக்கு எதிராகத் தொடர்ந்து பல செயல்களைச் செய்து கொண்டே இருக்கிறது. மக்களுக்காகப் போராடும் பாட்டாளி கட்சிகள் எத்தனையோ போராட்டங்கள் நடத்தி எதிர்ப்புகளைக் கொடுத்தாலும் எங்களின் முடிவுப் படி தான் நடப்போம் மற்றவர்களுக்காக மாற்றம் செய்யமாட்டோம் என்ற சர்வதிகார போக்கை விவசாயிகளுக்கு எதிராகத் தொடர்கிறது இந்த அரசு.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகாவில் அமைந்துள்ள கொத்தையம் என்ற கிராமத்தில் தொழிற்பேட்டை ஒன்றை அமைக்க அரசு திட்டமிடுகிறது. இதற்குத் தமிழக அரசு தேர்ந்தெடுத்து இருக்கின்ற இடம் எது என்று பார்த்தால் 70 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் அரளிக்குளம். கொத்தையம் கிராமம் மற்றும் அதனைச் சுற்றி இருக்கும் பல கிராமத்து விவசாயிகளின் நீர் பாசனத்திற்கு துணையாக நிற்கிறது அரளிக்குளம்.

தற்போது இருக்கும் அரசு திட்டங்களைத் தெளிவாகத் தீட்டுவதை விட மிக மிகத் தந்திரமாகத் தீட்டுகிறது. 10 வருடங்களுக்கு மேலாக ஆட்சியில் இருந்த இரண்டு அரசுகளும் குளத்தைத் தூர்வாராமல் செய்துவிட்டு தற்போது இந்தக் குளம் எதற்கும் பயனுள்ளதாக இல்லை எனவே அந்த இடத்தைச் சமமாக மாற்றித் தொழிற்பேட்டை அமைக்கப் போகிறோம் மக்களுக்கு வேலை கொடுக்கப் போகிறோம், மக்களை முன்னேற்றப் போகிறோம் என்று எண்ணற்ற அளவில் போலியான பிம்பங்களை மக்கள் மனதில் உருவாக்கிக் கொண்டு இருக்கிறது. சென்ற வருடம் இதே போலத்தான் அருகில் இருக்கும் மற்றொரு கிராமத்தில் தொழிற்பேட்டை அமைக்கப் போகிறோம் என்றது இந்த அரசாங்கம். இரண்டு மாதங்கள் பல கட்சிகளும் விவசாயிகளும் ஒன்றிணைந்து போராடி மாவட்ட ஆட்சியர் மூலம் தொழிற்பேட்டை வருவதை தடுத்து நிறுத்தினர்.

நாடளுமன்றத் தேர்தல் வந்தது உடனே மக்களுக்குத் துணையாக நிற்கும் கட்சிபோல நரி வேடம் அணிந்து நாங்கள் விவசாயத்தை காப்போம் தொழிற்பேட்டை வருவதை தடுத்து நிறுத்துவோம் என்று பல போலியான வாக்குறுதிகளை மேடைக்கு மேடை தெருவுக்குத் தெரு தொடர்ந்து கூச்சலிட்டு வெற்றியும் பெற்று தற்போது மீண்டும் அதே பழைய கதையான தொழிற்பேட்டை அமைப்பதில் வந்து நிற்கிறது தந்திரமான அரசு.

விவசாய மக்களுக்கு இல்லை இல்லை விவசாய தோழர்களுக்குத் தோழனாய் இருக்கும் கட்சிகளே மக்களை ஏமாற்றுகிறது என்பது தான் வருத்தமாக இருக்கிறது. மாற்றமும் முன்னேற்றமும் மக்களுக்குத் தேவை தான் அதில் எந்தவித மாற்று கருத்து இல்லை. இருந்தும் அந்த மாற்றம் முன்னேற்றம் எந்த ஒரு உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படாத விதத்தில் இருத்தல் வேண்டும் என்று மனிதம் கொண்ட மனிதர்கள் நினைக்கிறார்கள். பாட்டாளி மக்களுக்கான கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் தனது பாடலில் அழகாகக் கூறியிருக்கிறார். திருடனாய் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பார் அதேபோலத்தான் இருக்கிறது இன்றைய நிலை அரசாங்கமாய் பார்த்துத் திருந்தாவிட்டால் மக்களால் திருத்தப்படுவீர்கள் எனத் திலகபாமா தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *