National Medical Commission: மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்!

Advertisements

சென்னை: ‘அரசு மருத்துவர்களுக்குத் தரப்படும் ஊதிய விபரங்களை உடனடியாகச் சமர்ப்பிக்க, தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட வேண்டும்’ என, அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு வலியுறுத்தி உள்ளது.

போராட்டக்குழுத் தலைவர் பெருமாள் பிள்ளை, தேசிய மருத்துவ ஆணையம் செயலர் ஸ்ரீனிவாசுக்கு அனுப்பியுள்ள மனு:

சமீபத்தில் தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், மருத்துவ மாணவர்களுக்கான ஊக்கத் தொகை தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

அனைத்து இளநிலை, முதுநிலை, உயர் சிறப்பு மருத்துவர்களுக்கும் வழங்கப்படும், ஊக்கத்தொகை விபரங்களைச் சமர்ப்பிக்க, நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. எனவே, அது தொடர்பான விபரங்களை, அனைத்து மருத்துவக் கல்லுாரிகளும் அனுப்பி வைக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நடப்பு கல்வியாண்டு ஊக்கத்தொகை விபரங்களை, மருத்துவக் கல்லுாரிகள் தங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை வரவேற்கிறோம்.

அதுபோலவே, அரசு மருத்துவர்களுக்குத் தரப்படும், ஊதிய விபரங்களையும் உடனடியாகச் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும். மருத்துவ மாணவர்களுக்குரிய உதவித்தொகை தரப்பட வேண்டும். மருத்துவர்களை உருவாக்கும் மருத்துவ ஆசிரியர்களுக்கு, உரிய ஊதியம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியதும், என்.எம்.சி., யின் கடமை.

மற்ற மாநிலங்களில், எம்.பி.பி.எஸ்., மருத்துவர்களுக்குத் தரப்படும் ஊதியத்தை விட, 40,000 ரூபாய் குறைவாக, இங்குள்ள மருத்துவர்களுக்கு ஊதியம் தரப்படுகிறது. ஒரே வேலை, ஒரே ஊதியம் என்ற கோட்பாட்டின்படி, அரசு மருத்துவர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் தரப்பட வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, மருத்துவர் பணியிடங்கள் உருவாக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *